இலங்கை ஒயிட்வாஷ்: இந்தியா அபாரம்
இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 5-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 5-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், 5 ஆட்டங்களைக் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் இலங்கையை 5-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்துள்ளது இந்தியா.
இரு அணிகளுக்கு இடையே கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை பகலிரவாக நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 46.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்து வென்றது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணியில் தொடக்க வீரர் டிக்வெல்லா 2 ரன்களில் ஆட்டமிழக்க, உடன் வந்த கேப்டன் உபுல் தரங்கா நிலைத்து ஆடினார். டிக்வெல்லாவை தொடர்ந்து வந்த முனவீராவும் 4 ரன்களில் பெவிலியன் திரும்ப இலங்கை தடுமாற்றம் கண்டது.
அடுத்து வந்த திரிமானி, தரங்காவுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. எனினும், 34 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் எடுத்திருந்த உபுல் தரங்கா, அரைசதத்தை நெருங்கிய நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மேத்யூஸ், திரிமானியுடன் இணைந்து நிலைத்தார்.
இந்த ஜோடி 4-ஆவது விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தது. எனினும், அரைசதம் கடந்து 102 பந்துகளில் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 67 ரன்கள் எடுத்திருந்த திரிமானியை போல்டாக்கினார் புவனேஸ்வர் குமார். அதைத் தொடர்ந்து சிறிவர்தனா களமிறங்க, மறுமுனையில் அரைசதம் கடந்த மேத்யூஸýம் 55 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில், சிறிவர்தனா 18, டி சில்வா 9, தனஞ்ஜெயா 4, புஷ்பகுமாரா 8, மலிங்கா 2 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஃபெர்னாண்டோ 7 ரன்களுடன் களத்தில் இருக்க, 49.4 ஓவர்களில் 238 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இலங்கை.
இந்தியத் தரப்பில் புவனேஸ்வர் குமார் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
கோலி அசத்தல்: இதையடுத்து 239 ரன்களை இலக்காகக் கொண்ட இந்திய அணியின் ஆட்டத்தை ரோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹானே தொடங்கினர். இதில் தவனுக்குப் பதிலாக களம் கண்ட ரஹானே, அதிர்ச்சி அளிக்கும் வகையில் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவரை அடுத்து களம் கண்ட கேப்டன் கோலி அபாரமாக ஆடினார். மறுமுனையில் ரோஹித் சர்மா 16 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்து சற்று நிலைத்த மணீஷ் பாண்டேவும் 36 ரன்களில் பெவிலியன் திரும்பினார். கோலி அரைசதம் கடந்து நிதானமாக ஆடினார்.
அடுத்து வந்து அவருடன் இணைந்தார் கேதார் ஜாதவ். இந்த ஜோடி சிறப்பாக ஆடி, 4-ஆவது விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்தது. கோலி சதம் விளாசினார். இறுதியாக இந்தியா வெற்றி பெற 2 ரன்கள் தேவை இருந்த நிலையில் அரைசதம் கடந்து 73 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் எடுத்திருந்த கேதார் ஜாதவ் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து தோனி களத்துக்கு வர, கோலியும், தோனியும் தலா ஒரு ரன்கள் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தனர். 46.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்து வென்றது இந்தியா. கோலி 116 பந்துகளில் 9 பவுண்டரிகள் விளாசி 110 ரன்களுடனும், தோனி ஒரு ரன்னுடனும் ஆட்டமிழக்காமல்
இருந்தனர்.
ஆட்டநாயகன் விருதை புவனேஸ்வர் குமாரும், தொடர் நாயகன் விருதை ஜஸ்பிரித் பூம்ராவும் வென்றனர்.
தோனி உலக சாதனை
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 100 முறை ஸ்டம்பிங் செய்த உலகின் முதல் வீரர் என்ற பெருமையை தோனி தனது வசமாக்கியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்தில் யுவேந்திர சாஹலின் பந்துவீச்சில் அகிலா தனஞ்ஜெயாவை சாய்த்ததே தோனியின் 100-ஆவது ஸ்டம்பிங் ஆகும். தோனி இந்த உலக சாதனையை தனது 301-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் எட்டியுள்ளார். இதுதவிர தோனி மொத்தம் 281 கேட்ச்களை பிடித்துள்ளார்.
ஸ்கோர் போர்டு
இலங்கை
நிரோஷன் டிக்வெல்லா (சி) & (பி) குமார் 2 6
உபுல் தரங்கா (சி) தோனி (பி) பூம்ரா 48 34
முனவீரா (சி) கோலி (பி) குமார் 4 5
லஹிரு திரிமானி (பி) குமார் 67 102
ஏஞ்செலோ மேத்யூஸ் (சி) தோனி (பி) குல்தீப் 55 98
சிறிவர்தனா (சி) தாக்குர் (பி) குமார் 18 13
டி சில்வா ரன் அவுட் (தோனி/சாஹல்) 9 9
தனஞ்ஜெயா (ஸ்டம்பிட் ) தோனி (பி) சாஹல் 4 9
புஷ்பகுமாரா (பி) பூம்ரா 8 8
விஷ்வா ஃபெர்னாண்டோ நாட் அவுட் 7 11
மலிங்கா (சி) ராகுல் (பி) குமார் 2 4
உதிரிகள் 14
விக்கெட் வீழ்ச்சி: 1-14 (டிக்வெல்லா), 2-40 (முனவீரா), 3-63 (உபுல் தரங்கா), 4-185 (திரிமானி), 5-194 (மேத்யூஸ்), 6-205 (டி சில்வா), 7-212 (தனஞ்ஜெயா), 8-228 (புஷ்பகுமாரா), 9-228(சிறிவர்தனா), 10-238 (மலிங்கா).
பந்துவீச்சு: புவனேஸ்வர் குமார் 9.4-0-42-5, ஷர்துல் தாக்குர் 6-0-48-0, பூம்ரா 10-0-45-2, குல்தீப் யாதவ் 10-0-40-1, கேதார் ஜாதவ் 4-0-20-0, யுவேந்திர சாஹல் 10-0-36-1.
இந்தியா
ரோஹித் சர்மா (சி) புஷ்பகுமாரா (பி) ஃபெர்னாண்டோ 16 20
அஜிங்க்ய ரஹானே (சி) முனவீரா (பி) மலிங்கா 5 17
விராட் கோலி நாட் அவுட் 110 116
மணீஷ் பாண்டே (சி) தரங்கா (பி) புஷ்பகுமாரா 36 53
கேதார் ஜாதவ் (சி) டிக்வெல்லா (பி) டி சில்வா 63 73
தோனி நாட் அவுட் 1 1
உதிரிகள் 8
விக்கெட் வீழ்ச்சி: 1-17 (ரஹானே), 2-29 (ரோஹித்), 3-128 (பாண்டே), 4-237 (ஜாதவ்).பந்துவீச்சு: மலிங்கா 8-1-35-1, ஃபெர்னாண்டோ 7-0-40-1, தனஞ்ஜெயா 10-0-49-0, மேத்யூஸ் 3-0-14-0, புஷ்பகுமாரா 10-0-40-1, சிறிவர்தனா 4-0-28-0, டி சில்வா 4.3-0-29-1.
2
இந்த வெற்றியின் மூலம் 5 ஆட்டங்களைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கையை 2-ஆவது முறையாக ஒயிட்வாஷ் செய்துள்ளது இந்தியா. முன்னதாக, கடந்த 2014 நவம்பரில் நடைபெற்ற இருதரப்பு தொடரின்போது இலங்கை இதேபோல ஒயிட்வாஷ் செய்யப்பட்டது.
1
இந்த ஆட்டத்தில் புவனேஸ்வர் குமார் மொத்தம் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஒருநாள் போட்டியில் அவர் இவ்வாறு 5 விக்கெட்டுகள் வீழ்த்துவது இது முதல் முறையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...