காமன்வெல்த் மல்யுத்தம்: தங்கம் வென்றார் இந்தியாவின் சுஷில் குமார்!

இன்று நடைபெற்ற காமன்வெல்த் மல்யுத்தப் போட்டிகளில் இரு இந்திய வீரர்கள் தங்கம் வென்றுள்ளார்கள்...
காமன்வெல்த் மல்யுத்தம்: தங்கம் வென்றார் இந்தியாவின் சுஷில் குமார்!

இன்று நடைபெற்ற காமன்வெல்த் மல்யுத்தப் போட்டிகளில் இரு இந்திய வீரர்கள் தங்கம் வென்றுள்ளார்கள்.

கடந்த 5-ம் தேதி முதல் காமன்வெல்த் போட்டிகள் கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகின்றன. 71 நாடுகளைச் சேர்ந்த 4500-க்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 226 பேர் கொண்ட குழு பங்கேற்றுள்ளது. பளு தூக்குதல், துப்பாக்கி சுடுதல், பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ் உள்ளிட்டவற்றில் தங்கம் வென்று இந்திய வீரர்கள் சாதனை புரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் மகளிருக்கான துப்பாக்கிச் சுடுதலில் 50 மீ. ரைபிள் ப்ரோன் பிரிவில் இந்தியாவின் தேஜஸ்வினி சாவந்த் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். 

இந்த காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய அணிக்குக் கிடைக்கும் 11-வது பதக்கமாகும் இது. இதில் மட்டும் இந்திய அணி 4 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என ஏராளமான பதக்கங்களை அள்ளி அசத்தியுள்ளது.

இதையடுத்து மகளிருக்கான 53 கிலோ பிரிவு மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் பபிதா குமாரி இறுதிச்சுற்றில் கனடாவின் டயனா வைக்கரிடம் 2-5 என்கிற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்தார். இதையடுத்து பபிதா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. இது அவர் வெல்லும் மூன்றாவது காமன்வெல்த் பதக்கமாகும். 2010 காமன்வெல்த் போட்டியில் வெள்ளியும் கடந்த போட்டியில் தங்கமும் வென்றார்.

எனவே இந்தமுறையும் தங்கம் வெல்வார் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் பபிதா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது சற்று ஏமாற்றமடைய வைத்துள்ளது.

அடுத்ததாக ஆடவருக்கான 57 கிலோ பிரிவு மல்யுத்தப் பிரிவுப் போட்டியில் இந்தியாவின் ராகுல் அவாரே தங்கம் வென்றார். இன்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் கனடாவின் ஸ்டீவனைத் தோற்கடித்து அசத்தினார். போட்டியில் வெற்றி பெற்ற பிறகு கண்ணீருடன் தேசியக் கொடியை ஏந்திக்கொண்டு அரங்கத்தை வலம் வந்தார் ராகுல்.

அனைவரும் எதிர்பார்த்த 74 கிலோ மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் சுஷில் குமார் தங்கம் வென்றார். இறுதிச்சுற்றில் தென் ஆப்பிரிக்காவின் ஜொஹான்னஸ் போத்தாவை 80 விநாடிகளில் மிக எளிதாகத் தோற்கடித்து தங்கம் வென்றார் சுஷில் குமார். மல்யுத்தப் போட்டியில் இந்தியா வெல்லும் இரண்டாவது தங்கம் இது. மேலும், இந்தப் போட்டியில் இந்திய அணி வெல்லும் 14-வது தங்கப் பதக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com