ஜூனியர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கும் டிராவிடுக்கும் பரிசுத்தொகை அறிவிப்பு!

திராவிட் பயிற்சியின் கீழான இந்திய அணி இப்போட்டியில் தோல்வியே இன்றி முன்னேறி வந்துள்ளது...
ஜூனியர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கும் டிராவிடுக்கும் பரிசுத்தொகை அறிவிப்பு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஜூனியர் உலகக் கோப்பை போட்டியின் இறுதிச்சுற்றை இந்திய அணி வென்று கோப்பையை கைப்பற்றியுள்ளது. 

பத்தொன்பது வயதுக்கு உட்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின. இரு அணிகளுமே தலா 3 முறை உலகக் கோப்பையை கைப்பற்றியுள்ள நிலையில், 4-ஆவது முறையாக வாகை சூட இரு அணிகளுமே கடுமையாகப் போட்டியிட்டன. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சால் அந்த அணி 47.2 ஓவர்களில் 216 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மெர்லோ அதிகபட்சமாக 76 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் இஷான் போரெல், ஷிவா சிங், நாகர்கோடி, அனுகுல் ராய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சுலபமாக எதிர்கொண்ட இந்திய அணி, 38.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 220 ரன்களில் இலக்கை எட்டி கோப்பையைக் கைப்பற்றியது. மன்ஜோத் கல்ரா 101, தேசாய் 47 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

திராவிட் பயிற்சியின் கீழான இந்திய அணி இப்போட்டியில் தோல்வியே இன்றி முன்னேறி வந்துள்ளது. ஜூனியர் உலகக் கோப்பையை நான்காவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளது.

இதையடுத்து இந்திய அணி வீரர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் பிசிசிஐ பரிசுத்தொகை அறிவித்துள்ளது. தலைமைப் பயிற்சியாளரான டிராவிடுக்கு ரூ. 50 லட்சமும் அணி வீரர்களுக்கு ரூ. 30 லட்சமும் இதர பயிற்சியாளர்கள் மற்றும் அணி நிர்வாகிகளுக்கு ரூ. 20 லட்சமும் வழங்கப்படும் என பிசிசிஐயின் அறிக்கை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com