யு-19 உலகக் கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி!

பத்தொன்பது வயதுக்குட்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, காலிறுதி ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி...
யு-19 உலகக் கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி!
Updated on
1 min read

பத்தொன்பது வயதுக்குட்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, காலிறுதி ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. 

குயிஸ்டவுனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. பேட்டிங்குக்குக் கடினமான ஆடுகளத்தில் இந்திய அணி மிகச்சிறப்பாக விளையாடி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 265 ரன்கள் எடுத்தது. கேப்டன் பிருத்வி ஷா 40 ரன்களும் தேசாய் 34 ரன்களும் எடுத்தார்கள். அபிஷேக் சர்மா விரைவாக ரன்கள் சேர்த்து 49 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். இந்திய அணி வலுவான ஸ்கோரை அடைய முக்கிய காரணம், மூன்றாவதாகக் களமிறங்கிய சுப்மன் கில். ஆடுகளத்தின் தன்மையைச் சரியாகப் புரிந்துகொண்டு அதற்கேற்றபடி தன்னுடைய பேட்டிங்கை அமைத்து 94 பந்துகளில் 86 ரன்கள் குவித்தார். இந்திய அணியின் வெற்றிக்கு இவருடைய பக்குவமான பேட்டிங் மிகவும் உதவியுள்ளது.

கடினமான இலக்கை நிதானமான ரன்கள் சேர்ப்பதன் மூலம் எதிர்கொள்ள நினைத்த வங்கதேசம் அதன் பின்விளைவுகளையே அதிகம் சந்திக்க நேர்ந்தது. ஒருகட்டத்தில் பேட்ஸ்மேன்கள் விரைவாக ரன்கள் எடுக்க முயற்சி செய்தபோது அது இந்தியாவுக்குச் சாதகமான நிலையை உருவாக்கியது. தொடக்க வீரர் பினாக் கோஷ் மட்டும் அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார். மற்ற எந்தவொரு வீரரும் 20 ரன்களைத் தொடவில்லை. இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் வங்கதேச அணி 42.1 ஓவர்களில் 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. இந்திய வேகப்பந்துவீச்சாளர் நாகர்கோடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒரு ரன் அவுட்டுக்கும் அவர் உதவினார்.

கடந்த நவம்பர் மாதம் கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, வங்கதேசத்திடம் தோற்று போட்டியிலிருந்து வெளியேறியது. அதற்கு இந்தியா தற்போது பதிலடி கொடுத்துள்ளது.

131 ரன்கள் வித்தியாசத்தில் காலிறுதியில் வெற்றி கண்ட இந்திய அணி, வரும் 30-ம் தேதி நடைபெறவுள்ள அரையிறுதிச் சுற்றில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com