பெங்கால் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆன தமிழ் இளைஞர்!

அபிமன்யூ ரங்கநாதபரமேஸ்வரன் ஈஸ்வரன். சுருக்கமாக அபிமன்யூ ஈஸ்வரன். இவர் தான்  பெங்கால் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன்... 
பெங்கால் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆன தமிழ் இளைஞர்!
Published on
Updated on
1 min read

அபிமன்யூ ரங்கநாதபரமேஸ்வரன் ஈஸ்வரன். சுருக்கமாக அபிமன்யூ ஈஸ்வரன். இவர் தான்  பெங்கால் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன். 

இந்திய ஏ அணி வீரரான 23 வயது அபிமன்யு, கடந்த சில வருடங்களாக உள்ளூர் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்துக் கவனம் ஈர்த்துள்ளார். பெங்கால் அணிக்காக 50 முதல் தர ஆட்டங்களில் விளையாடி, 12 சதங்களும் 17 அரை சதங்களும் எடுத்துள்ளார். இதையடுத்து இந்த வருடத்தின் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளுக்குமான பெங்கால் கேப்டனாக அபிமன்யூ நியமிக்கப்பட்டுள்ளார். நிச்சயம் இந்திய அணிக்காக விளையாடுவார் என கடந்த வருடம் பெங்கால் அணியின் கேப்டனாக இருந்த மனோஜ் திவாரி, அபிமன்யூவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அபிமன்யூவின் தந்தை ஈஸ்வரன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், தாய் பஞ்சாபி. உத்தரகண்டில் வசித்து வரும் இவர்களுடைய குடும்பம், அபிமன்யூவின் கிரிக்கெட் வளர்ச்சிக்காக அவரை கொல்கத்தாவுக்கு அனுப்பியது. ஆரம்பத்தில் பள்ளி மாணவராக டெஹ்ராடுனில் உள்ள தனது தந்தையின் நேஷனல் ஸ்கூல் ஆஃப் கிரிக்கெட்டில் பயின்ற அபிமன்யூ, 9 வயதுக்குப் பிறகு கொல்கத்தாவில் பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார். வெளிமாநில வீரர்களை பெங்கால் அணியில் சேர்ப்பதற்கான விதிமுறைகள் இலகுவாக இருந்ததால் அவருடைய தந்தை கொல்கத்தாவைத் தேர்ந்தெடுத்தார். மேலும் தமிழ்நாடு போல பெங்காலிலும் கிரிக்கெட் அமைப்பு பலமாக இருந்தால் மகனின் வளர்ச்சிக்கு பெங்கால் மாநிலம் பொருத்தமாக இருக்கும் என நம்பினார் ஈஸ்வரன். 

ஈஸ்வரனுக்கும் கிரிக்கெட் மீது ஆர்வம் உண்டு. ஆனால் அதில் முழுவதுமாக ஈடுபட முடியாமல் சார்ட்டட் அக்கவுண்டட் ஆக ஆனார். மகனுக்கும் கிரிக்கெட்டில் ஆர்வம் இருந்ததால் அதை மிகவும் ஊக்கப்படுத்தியுள்ளார். அபிமன்யூ 1995-ல் பிறப்பதற்கு ஏழு வருடங்களுக்கு முன்பு, நேஷனல் ஸ்கூல் ஆஃப் கிரிக்கெட்டை ஆரம்பித்தார் ஈஸ்வரன். மகனுக்காக கிரிக்கெட் அகாடமியை உருவாக்காமல் திறமையுள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு உதவுவதற்காக இதை ஆரம்பிப்பததாக அவர் கூறுகிறார். தந்தை கொடுத்த கிரிக்கெட் வசதிகளை வீணாக்காமல் இன்று பெங்கால் அணியின் கேப்டனாகியுள்ளார் அபிமன்யூ.

ரஞ்சி போட்டியில் முக்கியமான போட்டிகளில் சதங்கள் எடுத்தது, இந்திய ஏ அணியில் இடம், பெங்கால் கேப்டன் என 23 வயதுக்குள் படிப்படியாக முன்னேறியுள்ளார் அபிமன்யூ ஈஸ்வரன். அடுத்ததாக இந்திய அணியின் கதவையும் சமீபகாலமாகத் தட்டிக்கொண்டிருக்கிறார். அந்த பொன்னான வாய்ப்பும் வெகுதொலைவில் இல்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com