சிக்ஸரும் பவுண்டரிகளுமாக அடித்து நொறுக்கிய நியூஸிலாந்து பேட்ஸ்மேன்கள்: இந்திய அணிக்கு 220 ரன்கள் இலக்கு!

2016 ஆகஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவுக்கு எதிராக 245 ரன்கள் எடுத்தது. அதன்பிறகு வேறு எந்த அணியும்...
சிக்ஸரும் பவுண்டரிகளுமாக அடித்து நொறுக்கிய நியூஸிலாந்து பேட்ஸ்மேன்கள்: இந்திய அணிக்கு 220 ரன்கள் இலக்கு!

ஆஸ்திரேலியாவில் டெஸ்ட், ஒரு நாள் தொடர்களை வென்று சாதனை படைத்த இந்திய அணி, தொடர்ச்சியாக நியூஸிலாந்தில் ஒரு நாள், டி20 தொடர்களில் ஆடி வருகிறது. ஏற்கெனவே ஒரு நாள் தொடரை 4-1 என கைப்பற்றியது இந்தியா. 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் வெலிங்டனில் இன்று தொடங்கியுள்ளது. 

டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் ரோஹித் சர்மா, தவன், ரிஷப் பந்த், விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக், தோனி, ஹார்திக் பாண்டியா, கிருனாள் பாண்டியா, புவனேஸ்வர், சாஹல், கலீல் அஹமது ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

முதல் ஓவரில் மட்டும்தான் நியூஸி. தொடக்க வீரர்கள் சாந்தமாக விளையாடினார்கள். அதன்பிறகு சிக்ஸரும் பவுண்டரிகளும் பறந்தன. புவனேஸ்வர் குமார் வீசிய 3-வது ஓவரில் 15 ரன்கள் எடுத்தார்கள் சைஃபர்டும் மன்ரோவும். கலீல் அஹமது வீசிய அடுத்த ஓவரில் அடுத்தடுத்து இரு சிக்ஸர் அடித்தார் மன்ரோ. அந்த ஓவரில் 16 ரன்கள்! கிருனாள் பாண்டியா வீசிய 5-வது ஓவரில் ஒரு சிக்ஸர் உள்பட 10 ரன்கள் எடுக்கப்பட்டது. என்ன செய்தால் இந்த ஜோடியைப் பிரிக்கமுடியும் என்று தவித்தார் ரோஹித் சர்மா. யார் பந்துவீசினாலும் அதை சிக்ஸருக்கும் பவுண்டரிக்கும் விரட்ட இருவரும் தயாராக இருந்தார்கள். அடுத்த ஓவரில் பாண்டியா வீசினார். அதிலும் மாற்றம் எதுவும் இல்லை. 2 பவுண்டரிகள் உள்பட 12 ரன்கள் எடுத்தார்கள். 

நியூஸிலாந்து பவர்பிளேயில், 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் குவித்தது. 

தன்பிறகு மன்ரோ 34 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி நிம்மதியாகப் பெருமூச்சுவிட்டது. கிருனாள் வீசிய 11-வது ஓவரில் சைஃபர்ட் 2 சிக்ஸர் அடித்தார். அந்த ஓவரில் நியூஸி. அணிக்கு 17 ரன்கள் கிடைத்தன. சாஹல் வீசிய அடுத்த ஓவரில் 13 ரன்கள் எடுத்ததோடு 12 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்திருந்தது நியூஸிலாந்து அணி.

இந்திய அணிக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய சைஃபர்ட் 43 பந்துகளில் 6 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் எடுத்த நிலையில், கலீல் அஹமது வீசிய யார்க்கர் பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணியினர் புதிய உற்சாகத்துடன் ஆட்டத்தை எதிர்கொள்ள ஆரம்பித்தார்கள். ஹார்திக் பாண்டியா பந்துவீச்சில் அடுத்தடுத்து 2 சிக்ஸர் அடித்தார் கேப்டன் வில்லியம்சன். எனினும் தினேஷ் கார்த்தின் அற்புதமான கேட்சினால் அறிமுக வீரர் மிட்செல் 8 ரன்களில் வெளியேறினார். அடுத்த ஓவரின் அடுத்தப் பந்தில் வில்லியம்சன் சாஹல் பந்துவீச்சில் 34 ரன்களுடன் ஆட்டமிழந்தார். இதன்பிறகு கிராண்ட்ஹோம் 3 ரன்களில் வெளியேறினார். 2 சிக்ஸர் அடித்த டெய்லர் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். இதுபோல ஆறு முன்னணி பேட்ஸ்மேன்கள் வெளியேறிய பிறகும் அதிரடியாக விளையாட நியூஸிலாந்து அணியிடம் பேட்ஸ்மேன்கள் இருந்தார்கள். கடைசிக்கட்டத்தில் களமிறங்கிய ஸ்காட் குக்ஜெலெஜின், தான் எதிர்கொண்ட அனைத்து பந்துகளையும் சிக்ஸரும் பவுண்டரிக்கும் விரட்ட முயன்றார். இதனால் அவர் 7 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 20 ரன்களும் சாண்ட்னர் 7 ரன்களும் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். 

நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் பாண்டியா 2 விக்கெட் எடுத்தாலும் 4 ஓவர்களில் 51 ரன்கள் கொடுத்து இந்திய அணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தினார். 

2016 ஆகஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவுக்கு எதிராக 245 ரன்கள் எடுத்தது. அதன்பிறகு வேறு எந்த அணியும் இந்தியாவுக்கு எதிராக 200 ரன்களை எடுக்கவில்லை. இன்று நியூஸிலாந்து அணி தனது பலத்தை நிரூபித்து இந்திய அணி பந்துவீச்சைப் பதம் பார்த்துவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com