பூம்ராவும், மலிங்காவும் போதாதாம்.. மும்பை இந்தியன்ஸுக்கு இவரும் வேணுமாம்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வந்த நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர் டிரென்ட் போல்ட், அடுத்த சீசன் முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக களமிறங்கவுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வந்த நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர் டிரென்ட் போல்ட், அடுத்த சீசன் முதல் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிக்காக களமிறங்கவுள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட்டில் 2014-ஆம் ஆண்டு கால் பதித்தவர் டிரென்ட் போல்ட். 2018 மற்றும் 2019 ஆகிய ஐபிஎல் சீசன்களில் இவர் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடினார். நியூஸிலாந்தில் அனைத்து ரக கிரிக்கெட்டிலும் அசத்தி வரும் இவர் உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களுள் முக்கியமானவராக திகழ்கிறார்.

இந்நிலையில், இவர் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியில் ஏற்கெனவே தலைசிறந்த பந்துவீச்சாளர்கள் உள்ளனர். மும்பை இந்தியன்ஸுக்கு வேகப்பந்துவீச்சாளர்களே பிரத்யேகமாக நிறைய வெற்றிகளைத் தேடித் தந்துள்ளனர். இந்த சூழலில் மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சை மேலும் பலப்படுத்தும் வகையில் டிரென்ட் போல்ட் அந்த அணியில் இணைந்துள்ளார்.

டிரென்ட் போல்ட்டின் வருகை குறித்து, மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி தெரிவிக்கையில்,

"சிறந்த வேகப்பந்துவீச்சு கூட்டணியை வைத்துள்ளது குறித்து மும்பை இந்தியன்ஸ் எப்போதுமே பெருமை கொள்ளும். ஒவ்வொரு ஆண்டும் பந்துவீச்சாளர்களே எங்களுக்கு நிறைய ஆட்டங்களில் வெற்றியைத் தேடித் தந்துள்ளனர். கடந்த ஆண்டின் இறுதி ஆட்டமே இதற்குத் தரமான ஒரு உதாரணம். 

டிரென்ட் போல்ட், மும்பை இந்தியன்ஸ் குடும்பத்தின் ஒரு அங்கமாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அடுத்து வரவுள்ள ஐபிஎல் சீசனை எதிர்நோக்கி உள்ளோம். அனைத்து ரக கிரிக்கெட்டிலும், குறிப்பாக ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருக்கும் அவரது அனுபவம் நிச்சயம் எங்களது அணிக்கு பலம் சேர்க்கும்" என்றார்.

முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணி மணிக்கட்டு சுழற்பந்துவீச்சாளர் மயங்க் மார்கண்டேவுக்குப் பதிலாக மேற்கிந்தியத் தீவுகளின் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோட்டை அணியில் சேர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் ரவிச்சந்திரன் அஸ்வினைத் தொடர்ந்து, அன்கிட் ராஜ்புட்டையும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மாற்றியுள்ளது. இதன்மூலம், 2020 ஐபிஎல் சீசனில் அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் களமிறங்கவுள்ளார். 

2018-இல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இணைந்த ராஜ்புட் 23 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடி 22 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். குறிப்பாக 2018-இல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது பஞ்சாப் அணிக்காக அவரது நினைவுகூரத்தக்க செயல்பாடாகும். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாமல் ஐபிஎல் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஒரே வீரர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com