நாங்கள் சீன நிறுவனம் அல்ல: ஐபிஎல் விளம்பரதாரர் டிரீம் 11 விளக்கம்

எங்களின் நிறுவனத்தின் அனைத்துத் தொழில்நுட்பங்களுக்கும் இந்தியாவில் இந்தியர்களால் உருவாக்கப்பட்டவை...
நாங்கள் சீன நிறுவனம் அல்ல: ஐபிஎல் விளம்பரதாரர் டிரீம் 11 விளக்கம்
Published on
Updated on
1 min read

பலரும் சொல்வது போல நாங்கள் சீன நிறுவனம் அல்ல என ஐபிஎல் போட்டியின் புதிய விளம்பரதாரர் டிரீம் 11 விளக்கம் அளித்துள்ளது.

ஐபிஎல் 2020 போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. செப்டம்பர் 19 (சனிக்கிழமை) அன்று தொடங்கும் ஐபிஎல் போட்டி நவம்பர் 10 (செவ்வாய்) அன்று முடிவடைகிறது. துபை, அபுதாபி, ஷார்ஜாவில் 53 நாள்களுக்கு 60 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. 

லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய-சீன வீரா்களுக்கு இடையே ஜூன் மாதம் திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பைச் சோ்ந்த ராணுவ வீரா்களும் மோதிக் கொண்டனா். இந்தச் சம்பவத்தில் தமிழகத்தின் ராமநாதபுரத்தைச் சோ்ந்த பழனி உள்பட 20 ராணுவ வீரா்கள் வீர மரணமடைந்ததாக இந்திய ராணுவம் அறிவித்தது. அதேபோல சீன ராணுவத்திலும் கடும் உயிா்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து சீனப் பொருள்களை இந்தியர்கள் வாங்கக் கூடாது, விற்பனை செய்யக்கூடாது என்கிற கோரிக்கைகள் வலுத்துள்ள நிலையில் ஐபிஎல் விளம்பரதாரராக சீன நிறுவனமான விவோ தொடரும் என பிசிசிஐ அறிவித்ததற்கு எதிர்ப்பு கிளம்பியது. 

இதையடுத்து ஐபிஎல் 2020 போட்டிக்காக பிசிசிஐயும் விவோ நிறுவனமும் தங்களுடைய கூட்டணியை ரத்து செய்வதாக அறிவித்தன.

இந்த வருட ஐபிஎல் போட்டிக்கான புதிய விளம்பரதாரரைத் தேடும் பணியில் இறங்கியது பிசிசிஐ.

டாடா குழுமம், அன்அகாடமி, டிரீம் 11 ஆகிய நிறுவனங்கள் ஐபிஎல் போட்டிக்கான புதிய விளம்பரதாரராக இருக்க விருப்பம் தெரிவித்து பிசிசிஐக்கு விண்ணப்பம் அளித்தன. 

டிரீம் 11 நிறுவனம் ஐபிஎல் விளம்பரதாரராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதை பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. நான்கு மாதங்கள் 13 நாள்களுக்கு ஐபிஎல் 2020 விளம்பரதாரராகச் செயல்படும். இதற்கு ரூ. 222 கோடி வழங்க டிரீம் 11 நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. 

இந்நிலையில் விவோ போல டிரீம் 11 நிறுவனமும் சீனப் பின்னணியைக் கொண்டது தான் என்கிற விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதையடுத்து தன் மீதான குற்றச்சாட்டுக்கு டிரீம் 11 நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. டிரீம் 11 நிறுவனம் சார்பாக ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

டிரீம் 11, இந்திய நிறுவனம் ஆகும். எங்களின் நிறுவனத்தின் அனைத்துத் தொழில்நுட்பங்களுக்கும் இந்தியாவில் இந்தியர்களால் உருவாக்கப்பட்டவை. இந்திய விளையாட்டு ரசிகர்களுக்கு மட்டுமே இது வழங்கப்படுகிறது.

கிட்டத்தட்ட இந்தியர்களுக்குச் சொந்தமான நிறுவனம் ஆகும். இதன் நிறுவனர்களும் 400+ ஊழியர்களும் இந்தியர்களே. ஐந்து முதலீட்டாளர்களில் ஒருவருக்கு மட்டுமே சீனப் பின்னணி உண்டு. அவருடைய குறுகியப் பங்கு மட்டுமே வைத்துள்ளார் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com