287 ரன்களுக்கு ஆட்டமிழந்தது மேற்கிந்தியத் தீவுகள்

​இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 287 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.
புகைப்படம்: ஐசிசி | டிவிட்டர்
புகைப்படம்: ஐசிசி | டிவிட்டர்


இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 287 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.

இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் மான்செஸ்டரில் கடந்த 16-ஆம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 469 ரன்கள் குவித்த நிலையில், டிக்ளேர் செய்தது.

இதையடுத்து, பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 4-ம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளையின்போது 2 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் எடுத்திருந்தது.  பிராத்வைட் 41 ரன்களுடனும், ஹோப் 25 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

உணவு இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஹோப் 25 ரன்களுக்கு சாம் கரன் பந்தில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு பிராத்வைட்டும், புரூக்ஸும் நல்ல பாட்னர்ஷிப்பைத் தொடர்ந்தனர்.

4-வது விக்கெட்டுக்கு 76 ரன்கள் சேர்த்த நிலையில், அரைசதம் அடித்து நம்பிக்கையளித்து வந்த பிராத்வைட் 75 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு, புரூக்ஸுடன் இணைந்த ராஸ்டன் சேஸும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த இணை நன்றாக விளையாடிக்கொண்டிருந்த நேரத்தில் அரைசதம் அடித்து 68 ரன்கள் எடுத்திருந்த புரூக்ஸ் பிராட் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, மேற்கிந்தியத் தீவுகள் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது.

புரூக்ஸைத் தொடர்ந்து பிளாக்வுட் மற்றும் டௌரிச்சை ரன் ஏதும் எடுக்க விடாமல் ஆட்டமிழக்கச் செய்தார் பிராட். கேப்டன் ஹோல்டரும் சொதப்ப ராஸ்டன் சேஸ் ரோச்சுடன் இணைந்து நிதானம் காட்டினார்.

எனினும், அவரும் அரைசதம் அடித்த கையோடு வோக்ஸ் பந்தில் 51 ரன்களுக்கு 9-வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். அதே ஓவரின் கடைசி பந்தில் கேப்ரியல் விக்கெட்டையும் வீழ்த்தினார் வோக்ஸ். இதன்மூலம், மேற்கிந்தியத் தீவுகள் அணி 287 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து அணி 182 ரன்களுடன் 2-வது இன்னிங்ஸைத் தொடங்கவுள்ளது. இன்றைய ஆட்டத்தில் 11 ஓவர்கள் மட்டுமே வீசப்படவுள்ளன. இதன்பிறகு நாளை ஒரு நாள் மட்டுமே மீதமுள்ளதால், இங்கிலாந்து அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி முடிந்தளவுக்கு ரன்களைக் குவித்து நாளை மேற்கிந்தியத் தீவுகளுக்கு இலக்கை நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அதற்கேற்றார்போல், 2-வது இன்னிங்ஸ் பேட்டிங்கில் வழக்கமான தொடக்க ஆட்டக்காரர்களுக்குப் பதிலாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com