/

துபையில் பயிற்சியைத் தொடங்கியது சிஎஸ்கே அணி

கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சஹார், ருதுராஜ் உள்ளிட்ட 13 பேருக்கும் அடுத்த வார இறுதியில்...

News image
Updated On :5 செப்டம்பர் 2020, 8:22 am

DIN

கரோனா பரிசோதனைக்குப் பிறகு தனிமைப்படுத்துதலை முடித்துக்கொண்ட சிஎஸ்கே வீரர்கள் தங்கள் பயிற்சியைத் தொடங்கியுள்ளார்கள்.

கரோனா பரவல் காரணமாக நிகழாண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பா் 19-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10-ம் தேதி முடிவடைகிறது. துபை, அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

கடந்த வாரம், இரண்டு வீரர்கள் உள்பட சிஎஸ்கேவைச் சேர்ந்த 13 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. பிறகு, எடுக்கப்பட்ட மூன்று பரிசோதனைகளில் எந்தவொரு சிஎஸ்கே வீரருக்கும் கரோனா இல்லை என்பது உறுதியானது. 

துபைக்கு ஆகஸ்ட் 21 அன்று வந்த சிஎஸ்கே அணியில், 13 பேருக்கு கரோனா உறுதியானதால் தங்களுடைய தனிமைப்படுத்துதல் காலத்தை நீட்டிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. மற்ற அணிகள் போல கரோனாவால் சிஎஸ்கே அணியும் பாதிக்கப்படாமல் இருந்திருந்தால் கடந்த ஆகஸ்ட் 28 அன்றே பயிற்சியை ஆரம்பித்திருக்கும்.

3-வது பரிசோதனையிலும் 13 பேரைத் தவிர இதர சிஎஸ்கே வீரர்கள் அனைவருக்கும் கரோனா இல்லை என்பது உறுதியானது. இதையடுத்து சிஎஸ்கே வீரர்கள் துபையில் தங்கள் பயிற்சியைத் தொடங்கியுள்ளார்கள். செப்டம்பர் 1 அன்று துபைக்கு வந்த தென் ஆப்பிரிக்க வீரர்களான டு பிளெஸ்ஸிஸ், லுங்கி என்கிடி ஆகிய இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் பயிற்சியில் கலந்துகொள்ளவில்லை. செப்டம்பர் 7 முதல் அவர்கள் பயிற்சியைத் தொடங்கவுள்ளார்கள். 

கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சஹார், ருதுராஜ் உள்ளிட்ட 13 பேருக்கும் அடுத்த வார இறுதியில் இரு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். அப்போதுதான் அவர்களுடைய தனிமைப்படுத்துதல் காலம் முடிவடைகிறது. இதில் கரோனா இல்லை என்பது உறுதியானால் 13 பேரும் பயிற்சியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.