இந்திய அணியின் வெற்றியை 2-வது நாளன்றே கணித்த சச்சின் டெண்டுல்கர்

இங்கிலாந்து முதலில் பந்து வீசியது நல்ல முடிவு அல்ல. நமது தொடக்க வீரர்கள் அற்புதமாக பேட்டிங் செய்தார்கள். 
இந்திய அணியின் வெற்றியை 2-வது நாளன்றே கணித்த சச்சின் டெண்டுல்கர்

இந்திய அணியின் லார்ட்ஸ் டெஸ்ட் வெற்றியை 2-வது நாளன்றே கணித்ததாக சச்சின் கூறியுள்ளார்.

இந்தியா - இங்கிலாந்துக்கு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 2-வது டெஸ்ட் நடைபெற்றது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 364 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 391 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 4-ம் நாளில் இங்கிலாந்து அணி சிறப்பாகப் பந்துவீசியது. 4-ம் நாள் முடிவில் இந்திய அணி, 82 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது.  இந்த டெஸ்டின் கடைசி கட்டத்தில் தடுமாற்றமான நிலையில் இருந்த இந்தியா, 5-ஆம் நாளில் பந்துவீச்சாளர்களான முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ராவின் அதிரடியான ‘ஆல்-ரவுண்ட்’ ஆட்டத்தால் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு வெற்றியை எட்டியது. இந்திய அணி தனது 2-வது இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஷமி 56, பும்ரா 34 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இதனால் இங்கிலாந்து அணிக்கு 272 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பிறகு, இந்திய அணி அற்புதமாகப் பந்துவீசி 120 ரன்களுக்கு இங்கிலாந்தை ஆல் அவுட் செய்தது. இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது:

டாஸில் வென்று இந்திய அணியை ஜோ ரூட் பேட்டிங் செய்ய அழைத்தபோதே நான் ஆச்சர்யப்பட்டேன். இந்திய அணியின் பந்துவீச்சு குறித்து இங்கிலாந்து அணியின் கவலையை அது கோடிட்டுக் காட்டியது. வெள்ளியன்று (2-வது நாள்) எனது நண்பருக்குத் தகவல் அனுப்பினேன், வானிலை அனுமதித்தால் இந்த டெஸ்டில் நாம் வெற்றி பெறுவோம் என்றேன்.

அதன்பிறகு ஆடுகளம் வறண்டு காணப்பட்டது. சிராஜ் புதிதாகப் பந்துவீச வந்தபோது நல்ல நீளத்தில் வீசினார். அந்தப் பந்து ஆலி ராபின்சனின் நெஞ்சில் பட்டது. ஆடுகளம் அதிகமாக வறண்டதால் ஏற்பட்ட விளைவு அது. இங்கிலாந்து முதலில் பந்து வீசியது நல்ல முடிவு அல்ல. நமது தொடக்க வீரர்கள் அற்புதமாக பேட்டிங் செய்தார்கள். 

இங்கிலாந்து அணியில் எந்த வீரரைப் பார்த்து இவர் சதமடிப்பார் எனக் கூற முடியும்? ஜோ ரூட்டைத் தவிர இந்த அணியில் வேறு யாரையும் அப்படிக் குறிப்பிட முடியாது. இதற்கு முன்பு குக், மைக்கேல் வாஹ்ன், பீட்டர்சன், ஐயன் பெல், டிராட், ஸ்டிராஸ் எனப் பலர் இருந்தார்கள். சிலர் அவ்வப்போது சதமடிக்கலாம். ஆனால் பெரிய சதங்களை எத்தனை பேர் தொடர்ச்சியாக அடிக்க முடியும்? ரூட்டைத் தவிர வேறு யாரும் இல்லை. இதுதான் இங்கிலாந்தின் தற்போதைய பேட்டிங்கின் நிலைமை. அதனால் தான் முதலில் பந்துவீச ரூட் முடிவெடுத்திருக்கலாம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com