எப்படி இருக்க வேண்டும் மகளிர் ஐபிஎல்?: மந்தனா பேட்டி

மகளிர் ஐபிஎல் போட்டியை முதலில் ஐந்து அல்லது ஆறு அணிகளைக் கொண்டு தொடங்க வேண்டும் என்று நட்சத்திர வீராங்கனை மந்தனா கூறியுள்ளார்.
எப்படி இருக்க வேண்டும் மகளிர் ஐபிஎல்?: மந்தனா பேட்டி

மகளிர் ஐபிஎல் போட்டியை முதலில் ஐந்து அல்லது ஆறு அணிகளைக் கொண்டு தொடங்க வேண்டும் என்று நட்சத்திர வீராங்கனை மந்தனா கூறியுள்ளார்.

கிரிக்கெட் வீரர் அஸ்வினின் யூடியூப் சேனலுக்கு இந்திய கிரிக்கெட் வீராங்கனை மந்தனா பேட்டியளித்துள்ளார். மகளிர் ஐபிஎல் போட்டி பற்றி அவர் கூறியதாவது:

இந்தியாவில் ஆடவர், மகளிருக்கு மாநிலங்களின் எண்ணிக்கை ஒரே அளவில் தான் உள்ளன. ஆடவர் ஐபிஎல் போட்டியைத் தொடங்கிய பிறகு அதன் தரம் நாளுக்கு நாள் அதிகமாகியுள்ளது. இப்போதுள்ள தரம் 10 வருடங்களுக்கு முன்பு இல்லை. இதேதான் மகளிர் ஐபிஎல் போட்டிக்கும் நடக்கும். மகளிர் ஐபிஎல் போட்டியை முதல் ஐந்து அல்லது ஆறு அணிகளுடன் தொடங்கலாம். ஓரிரு வருடங்களில் எட்டு அணிகளாக உயர்த்தலாம். ஐபிஎல் போட்டியை ஆரம்பிக்காமல் என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரியாது. இந்திய மகளிர் கிரிக்கெட்டில் திறமையான வீராங்கனைகள் இல்லை என்று கூறுவதில் அர்த்தமில்லை. ஏனெனில் எங்களுக்கு ஐபிஎல் போன்ற ஒரு போட்டி கிடையாது. ஆறு அணிகள் கலந்துகொள்ளும் டி20 போட்டி இருந்ததே இல்லை. அதனால் நம்மிடம் திறமையான வீராங்கனைகள் இருக்கிறார்களா என்பது இனிமேல் தான் தெரியும். 

மகளிர் ஐபிஎல் போட்டியைத் தொடங்கும்போது எட்டு அணிகள் இருந்தால் அது எப்படி இருக்கும் என எனக்குத் தெரியவில்லை. எனவே முதலில் ஆறு அணிகள், பிறகு எட்டு அணிகள் என மாறலாம். ஐபிஎல் போட்டியைத் தொடங்காமல் நம் வீராங்கனைகளின் திறமையை நம்மால் உயர்த்த முடியாது. ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் கிரிக்கெட் நான்கு வருடத்துக்கு முன்பு இருந்தது போல இப்போது இல்லை. ஆஸ்திரேலியாவில் சர்வதேச ஆட்டங்களில் விளையாடக்கூடிய வீராங்கனைகள் 40-50 பேர் இருக்கிறார்கள். இது இந்தியாவிலும் நடக்கவேண்டும். அதற்கு ஐபிஎல் பெரிய அளவில் உதவும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com