பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

8 விக்கெட்டுகள் வீழ்த்தியவரை ஊருக்கு அனுப்பி வைக்கிறது இங்கிலாந்து

​இந்தியாவுடனான 2-வது டெஸ்டில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய மொயீன் அலி கடைசி 2 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடாமல் இங்கிலாந்து திரும்புகிறார்.

News image
Updated On :16 பிப்ரவரி 2021, 11:04 am

DIN


இந்தியாவுடனான 2-வது டெஸ்டில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய மொயீன் அலி கடைசி 2 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடாமல் இங்கிலாந்து திரும்புகிறார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து தோல்வியடைந்திருந்தாலும் மொயீன் அலி, பென் ஃபோக்ஸ் உள்ளிட்டோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இலங்கை தொடருக்கு முன் கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அந்த தொடரில் மொயீன் அலி பங்கேற்கவில்லை. இந்தியாவுடனான முதல் டெஸ்ட் ஆட்டத்திலும் அவர் விளையாடவில்லை. 18 மாதங்களுக்குப் பிறகு முதன்முதலாக இந்தியாவுடனான 2-வது டெஸ்டில் மொயீன் அலி விளையாடினார். இருந்தபோதிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மொயீன் அலி 2 இன்னிங்ஸிலும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குறிப்பாக இரண்டு இன்னிங்ஸிலும் இந்தியக் கேப்டன் விராட் கோலி விக்கெட்டை மொயீன் அலியே வீழ்த்தினார்.

இதுதவிர 2-வது இன்னிங்ஸ் பேட்டிங்கில் அதிரடி காட்டிய அவர் 18 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார்.

இந்த நிலையில், 24-ம் தேதி தொடங்கவுள்ள இந்தியாவுடனான 3-வது டெஸ்ட் ஆட்டத்துக்கான அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. அதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மொயீன் அலி பெயர் இடம்பெறவில்லை. இந்த ஆட்டத்தில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் அடுத்த ஆட்டத்தில் இடம்பெறாமல்போனது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சனையும் இந்த முடிவு ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மொயீன் அலி நாடு திரும்புவது பற்றி இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கூறியது:

"மொயீன் அலி வீடு திரும்ப வேண்டும் என முடிவெடுத்தார். இது அவருக்கு மிகவும் கடினமான சுற்றுப்பயணம். தொடக்கத்தில் கூறியதுபோல், வீரர்கள் எவரேனும் பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளியேற வேண்டும் என நினைத்தால், அவர்களுக்கு அதற்கான அனுமதி உள்ளது. நாங்கள் அதன்படி நிற்பதுதான் முக்கியம்.

அணியிலிருந்து மொயீன் அலி மட்டுமே நாடு திரும்புகிறார். முடிந்தளவுக்கு நிறைய வீரர்கள் இருக்க வேண்டும் என்பது எங்களின் விருப்பமும். ஆனால், அவர்கள் இங்கு இருக்கும்போது எந்த அழுத்தமும் இல்லாமல் சௌகரியாக இருக்க வேண்டும். அவர் குடும்பத்தினருடன் இருக்க வேண்டும் என விரும்புகிறார். நாங்கள் அதைப் புரிந்துகொண்டு மதிக்கிறோம்" என்றார் ஜோ ரூட்.

கரோனாவுக்குப் பிறகு முதன்முதலில் சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடத் தொடங்கியது இங்கிலாந்து அணிதான். கரோனாவுக்கு முன்பு போல் அல்லாமல் தற்போதைய சூழல்களில் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்றால் கடுமையான பாதுகாப்பு வளைய விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இது வீரர்களுக்கு உளவியல் ரீதியான பிரச்னைகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. 

இதனால், வீரர்கள் தேர்வில் சுழற்சி முறையைக் கடைப்பிடிக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்தது. இலங்கை தொடரில் விளையாடிய அனுபவ வீரரான ஜானி பேர்ஸ்டோவ் இந்தியாவுடனான முதலிரண்டு டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடவில்லை. இந்தியாவுடனான முதல் டெஸ்டில் விளையாடிய ஜாஸ் பட்லர் நாடு திரும்பினார். முதல் டெஸ்டில் அசத்திய ஜேம்ஸ் ஆண்டர்சன் 2-வது டெஸ்டில் பங்கேற்கவில்லை. 

வீரர்களின் பனிச்சுமையைக் கருத்தில் கொண்டு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த நடைமுறையைக் கடைப்பிடித்து வருகிறது. இந்தச் சூழல்களால் எல்லா நேரமும் சிறந்த அணியைக் கொண்டு களமிறங்க முடியாது என்ற நிதர்சனத்தை இங்கிலாந்து அணி நிர்வாகம் உணர்ந்தே நடைமுறைகளைப் பின்பற்றி வருகிறது.

எனினும், சிறந்த விளையாடும் லெவனை தேர்வு செய்யாததற்கான விமரிசனங்களைத் தவிர்க்க முடியவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.