2021 சிறந்த வீரருக்கான ஐசிசி விருது: இந்திய ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்த பரிந்துரைப் பட்டியல்
By DIN | Published On : 31st December 2021 03:34 PM | Last Updated : 31st December 2021 03:34 PM | அ+அ அ- |

ஷாஹீன் அப்ரிடி
2021-ம் ஆண்டின் ஐசிசி விருதுக்குரிய சிறந்த வீரருக்கான பரிந்துரைப் பட்டியல் வெளியாகியுள்ளது.
ஐசிசி விருதுகள் தொடர்புடைய பரிந்துரைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டு வருகிறது. மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடவர், மகளிருக்கான விருதுகள் அறிவிக்கப்படவுள்ளன.
2021-ம் ஆண்டுக்கான சிறந்த வீரர் (ஆடவர் மற்றும் மகளிர்), சிறந்த டெஸ்ட் வீரர் (ஆடவர் மற்றும் மகளிர்), சிறந்த ஒரு நாள் வீரர் (ஆடவர் மற்றும் மகளிர்), சிறந்த டி20 வீரர் (ஆடவர் மற்றும் மகளிர்), சிறந்த இளம் வீரர் (ஆடவர் மற்றும் மகளிர்), சிறந்த அசோசியேட் வீரர் (ஆடவர் மற்றும் மகளிர்), சிறந்த நன்னடத்தை விருது, சிறந்த நடுவருக்கான விருது ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன. ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை திறமையை சிறந்த அளவில் வெளிப்படுத்திய வீரர்கள் ஐசிசியின் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறுவார்கள். கிரிக்கெட் நிபுணர்கள், ரசிகர்கள் ஆகியோரின் கருத்துகளின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஜனவரி 17 முதல் 24 வரை ஒவ்வொரு பிரிவிலும் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.
சிறந்த டெஸ்ட் வீரருக்கான பரிந்துரைப் பட்டியலில் இந்திய வீரர் அஸ்வினும் சிறந்த டி20 வீராங்கனைக்கான பரிந்துரைப் பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவும் இடம்பெற்றுள்ளார்கள்.
இந்நிலையில் 2021-ம் ஆண்டின் ஐசிசி விருதுக்குரிய சிறந்த வீரருக்கான பரிந்துரைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் ஷாஹீன் அப்ரிடி, முகமது ரிஸ்வான் என இரு பாகிஸ்தான் வீரர்களும் இங்கிலாந்தின் ஜோ ரூட், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். இந்தப் பட்டியலில் இந்திய வீரர் யாரும் இல்லாதது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...