தமிழக அணி டி20 சாம்பியன்: ஷாருக் கானின் கடைசிப் பந்து சிக்ஸரைக் கண்டுகளித்த தோனி

சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியின் இறுதி ஆட்டத்தைத் தொலைக்காட்சி வழியாகக் கண்டுகளித்தார் சிஎஸ்கே கேப்டன் தோனி.
படம் - twitter.com/ChennaiIP
படம் - twitter.com/ChennaiIP

சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் இறுதிச்சுற்றில் கர்நாடகத்தை வீழ்த்தி தமிழக அணி சாம்பியன் ஆகியுள்ளது. கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்து தமிழக அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார் ஷாருக் கான்.

தொடர்ந்து 3-வது வருடமாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறி இந்தியாவின் சிறந்த டி20 அணியாக உள்ளது தமிழக அணி. காலிறுதி ஆட்டத்தில் கேரளத்தை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. அரையிறுதியில் ஹைதராபாத்தை எளிதாக வீழ்த்தியது.

தில்லியில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழக அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. கர்நாடக அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. நடுவரிசை வீரர் அபினவ் மனோஹர் 46 ரன்களும் பிரவீண் டுபே 33 ரன்களும் எடுத்தார்கள். சாய் கிஷோர் 4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவருடைய பந்துகளில் கர்நாடக பேட்டர்களால் ஒரு பவுண்டரியோ சிக்ஸரோ அடிக்க முடியவில்லை. தமிழக அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து சையத் முஷ்டாக் அலி கோப்பையைத் தக்கவைத்துக் கொண்டது. 15 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் 33 ரன்கள் எடுத்த ஷாருக் கான் ஆட்ட நாயகன் விருதை வென்றார். 

சையத் முஷ்டாக் அலி டி20 கோப்பையை தமிழக அணி 3-வது முறையாக வென்றதன் மூலம் இக்கோப்பையை அதிகமுறை வென்ற அணி என்கிற சாதனையைப் படைத்துள்ளது.

கடைசி 4 ஓவர்களில் தமிழக அணி வெற்றி பெற 55 ரன்கள் தேவைப்பட்டன. அப்போதுதான் ஷாருக் கான் களமிறங்கியிருந்தார். அதனால் அணியைக் கரை சேர்க்க வேண்டிய மொத்தப் பொறுப்பும் அவரிடம் இருந்தது. தர்ஷன் வீசிய 17-வது ஓவரில் ஷாருக் கானும் சஞ்சய் யாதவும் 19 ரன்கள் எடுத்தார்கள். ஆனால் 18-வது ஓவரை வீசிய பிரதீக் ஜெயின் சஞ்சய் யாதவின் விக்கெட்டை வீழ்த்தியதோடு அந்த ஓவரில் 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அதனால் கடைசி இரு ஓவர்களில் வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டன. 19-வது ஓவரின் முதல் 5 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் கடைசி 7 பந்துகளில் 22 ரன்கள் தேவைப்பட்டன. கடைசிப் பந்தில் ஷாருக் கான் சிக்ஸர் அடித்ததால் கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டன. 

முதல் பந்தில் சாய் கிஷோர் ஒரு பவுண்டரி அடித்தார். ஜெயின் இரு வைட் பந்துகளை வீசினார். இதனால் கடைசிப் பந்தில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டன. பரபரப்பான அந்தத் தருணத்தில் அற்புதமான சிக்ஸர் அடித்து தமிழக அணிக்கு வெற்றியை வழங்கினார் அதிரடி வீரர் ஷாருக் கான்.

சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியின் இறுதி ஆட்டத்தைத் தொலைக்காட்சி வழியாகக் கண்டுகளித்தார் சிஎஸ்கே கேப்டன் தோனி. இதன் புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com