ஆம்ப்ரோஸை விமர்சனம் செய்யலாமா?: கெய்லுக்கு ரிச்சர்ட்ஸ் அறிவுரை

ஆம்ப்ரோஸின் விமர்சனங்களை ஊக்கமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கெய்லுக்கு ரிச்சர்ட்ஸ் அறிவுரை வழங்கியுள்ளார்.
ஆம்ப்ரோஸை விமர்சனம் செய்யலாமா?: கெய்லுக்கு ரிச்சர்ட்ஸ் அறிவுரை

ஆம்ப்ரோஸின் விமர்சனங்களை ஊக்கமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கெய்லுக்கு ரிச்சர்ட்ஸ் அறிவுரை வழங்கியுள்ளார்.

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான மே.இ. தீவுகள் அணியில் கிறிஸ் கெயில் இடம்பெற்றுள்ளார். எனினும் சமீபகாலமாக அவர் சரியாக விளையாடாததால் மே.இ. அணியில் அவருக்கு வாய்ப்பளிக்கக் கூடாது என முன்னாள் வீரர் ஆம்ப்ரோஸ் கூறினார். இந்த வருடம் கெயில் விளையாடிய 16 சர்வதேச டி20 ஆட்டங்களில் ஒரு அரை சதத்துடன் 227 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி - 17.46. ஸ்டிரைக் ரேட் - 117.61.

ஆம்ப்ரோஸின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு பேட்டியில் கெயில் கூறியதாவது: மேற்கிந்தியத் தீவுகள் அணிக்குள் நான் நுழைந்தபோது ஆம்ப்ரோஸ் மீது அதிக மரியாதை வைத்திருந்தேன். என்னைப் பற்றி விமர்சனம் செய்து வருகிறார் ஆம்ப்ரோஸ். கவனத்துக்காகச் செய்கிறாரா எனத் தெரியவில்லை. ஆனால் அவருக்குக் கவனம் கிடைக்கிறது. அதனால் அவர் ஆசைப்படும் கவனத்தை நானும் திருப்பித் தருகிறேன். ஆம்ப்ரோஸ் மீது எனக்கு எவ்வித மரியாதையும் கிடையாது. எப்போது நான் அவரைப் பார்த்தாலும் அணியைப் பற்றி எதிர்மறையாகப் பேசுவதை நிறுத்தவும், அணிக்கு ஆதரவு கொடுங்கள் எனக் கூறுவேன். மற்ற அணிகளில் முன்னாள் வீரர்கள் அவர்களுடைய அணிகளுக்கு ஆதரவு அளிக்கிறார்கள். அதேபோல டி20 உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டியில் எங்களுக்கு ஏன் முன்னாள் வீரர்கள் ஆதரவளிக்கக் கூடாது? டி20 உலகக் கோப்பையை இருமுறை வென்றுள்ளோம். இந்தமுறை கோப்பையைத் தக்கவைக்க முயல்கிறோம். முன்னாள் வீரர்களின் எந்தக் கருத்துகளையும் நான் எடுத்துக்கொள்ள மாட்டேன் என்றார்.

இந்நிலையில் கெய்ல் - ஆம்ப்ரோஸ் இடையிலான கருத்து மோதலைச் சமாதானம் செய்துவைக்க முன்வந்துள்ளார் முன்னாள் வீரர் ரிச்சர்ட்ஸ். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

தனது உண்மையான கருத்தைக் கூற ஆம்ப்ரோஸுக்கு உரிமை உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் கெய்ல் அளவுக்கு ஆம்ப்ரோஸும் சாதித்தவர் தான். அவரைப் போன்ற ஒரு சாதனையாளரிடமிருந்து கருத்து வரும்போது அதை மதிக்க வேண்டும். நான் கெய்லாக இருந்திருந்தால் என்ன சாதிக்க வேண்டும் என்பதில் தான் கவனம் செலுத்துவேன். ஏனெனில் ஆம்ப்ரோஸ் மட்டுமல்ல பலருக்கும் கெய்ல் மீது விமர்சனங்கள் இருக்கலாம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com