சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

வெற்றியை நெருங்கும் இந்தியா: 6 விக்கெட்டுகளை இழந்த வங்கதேசம்!

4-வது நாளின் கடைசிப் பகுதியில் மேலும் 3 விக்கெட்டுகளை எடுத்து பாதுகாப்பான நிலைக்குச் சென்றது இந்திய அணி.

News image
Updated On :17 டிசம்பர் 2022, 10:58 am

DIN

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் வங்கதேச அணி 4-வது நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்துள்ளது.

சட்டோகிராமில் நடைபெற்று வரும் டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 133.5 ஓவர்களில் 404 ரன்கள் எடுத்தது. ஷ்ரேயஸ் ஐயர் 86, அஸ்வின் 58 ரன்கள் எடுத்தார்கள். தைஜுல் இஸ்லாம், மெஹிதி ஹசன் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். வங்கதேச அணி 55.5 ஓவர்களில் 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும் சிராஜ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 254 ரன்கள் முன்னிலை பெற்றதால் ஃபாலோ ஆன் ஆனது வங்கதேச அணி. எனினும் 2-வது இன்னிங்ஸில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது இந்திய அணி. இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 61.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. புஜாரா, ஷுப்மன் கில் சதமடித்தார்கள். 

முதல் டெஸ்டை வங்கதேச அணி வெற்றி பெற 513 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 3-வது நாள் முடிவில் வங்கதேச அணி விக்கெட் இழப்பின்றி 12 ஓவர்களில் 42 ரன்கள் எடுத்தது. ஷான்டோ 25, ஜாகீர் ஹசன் 17 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 10 விக்கெட்டுகள் மீதமிருந்த நிலையில் வங்கதேச அணியின் வெற்றிக்கு 471 ரன்கள் தேவைப்பட்டன.

இன்று, முதல் பகுதியில் வங்கதேச தொடக்க வீரர்கள் ஷான்டோவும் ஜாகீர் ஹசனும் சிறப்பாக விளையாடி விக்கெட் எதுவும் விழாமல் பார்த்துக்கொண்டார்கள். இந்திய அணியினர் அளித்த நெருக்கடியை நன்கு எதிர்கொண்டார்கள். 

வங்கதேச அணி 2-வது இன்னிங்ஸில் 4-வது நாள் உணவு இடைவேளையின்போது விக்கெட் இழப்பின்றி 119 ரன்கள் எடுத்தது. ஷான்டோ 64, ஜாகீர் ஹசன் 55 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். இந்திய அணிக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் எடுத்த வங்கதேச ஜோடி என்கிற பெருமையைப் பெற்றார்கள். 

உணவு இடைவேளைக்குப் பிறகு உமேஷ் யாதவ் முதல் விக்கெட்டை வீழ்த்தி இந்திய ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தார். ஸ்லிப் பக்கம் ஷான்டோ அளித்த கேட்சை கோலி தவறவிட, உடனே அருகில் இருந்த ரிஷப் பந்த் சாமர்த்தியமாக அதைப் பிடித்தார். ஷான்டோ 67 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த யாசிர் அலியை 5 ரன்களில் போல்ட் செய்தார் அக்‌ஷர் படேல். லிட்டன் தாஸ் 19 ரன்களில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். 

வங்கதேச அணி 4-வது நாள் தேநீர் இடைவேளையின்போது 71 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. ஜாகீர் ஹசன் 82, முஷ்ஃபிகுர் ரஹிம் 2 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

4-வது நாளின் கடைசிப் பகுதியில் மேலும் 3 விக்கெட்டுகளை எடுத்து பாதுகாப்பான நிலைக்குச் சென்றது இந்திய அணி. 219 பந்துகளில் சதமடித்த ஜாகீர் ஹசன் மேலும் ரன் எதுவும் சேர்க்காமல் இந்த டெஸ்டில் அஸ்வின் முதல் விக்கெட்டை எடுக்க உதவினார். முஷ்ஃபிகுர் ரஹிம் 23 ரன்களிலும் நுருல் ஹசன் 3 ரன்களிலும் அக்‌ஷர் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்கள். 

4-வது நாள் முடிவில் வங்கதேச அணி 102 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் ஷகிப் அல் ஹசன் 40, மெஹிதி ஹசன் 9 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். அக்‌ஷர் படேல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடைசி நாளில் 4 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் வங்கதேச அணியின் வெற்றிக்கு மேலும் 241 ரன்கள் தேவைப்படுகின்றன. இதனால் இந்திய அணி மீதமுள்ள 4 விக்கெட்டுகளை எடுத்து டெஸ்ட் தொடரில் முன்னிலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.