உலகக் கோப்பை: சாதிப்பார்களா சதுரங்கச் சட்டைக்காரர்கள்?

லூகா மோட்ரிச்சுக்குப் பிரியாவிடைப் பரிசாக, இந்த 3-வது இடம் அமையும்.
குரோஷிய வீரர்கள்
குரோஷிய வீரர்கள்

1991-ம் ஆண்டு யூகோஸ்லாவியா என்ற நாடு, கல் பட்ட கண்ணாடி போல  7 துண்டுகளாக உடைந்து சிதறியது. அந்த 7 துண்டுகளில் ஒன்றுதான் குரோஷியா நாடு.

1998 உலகக் கோப்பையில் குரோஷியா கால்பந்தாட்ட அணி முதன்முறையாக கால் பதித்தபோது அதைக் கற்றுக்குட்டி அணியாகத்தான் பலர் நினைத்துக் கொண்டிருந்தார்கள். 

ஆனால், அந்தப் போட்டியில், ஜமைக்கா, ஜப்பானை எல்லாம் வீழ்த்தி, ஆர்ஜெண்டீனாவிடம் மட்டும் தோற்று, அடுத்த சுற்றில் ருமேனியாவை வீழ்த்தி, காலிறுதியில் ஜெர்மனியை 3-0(!) எனத் தோற்கடித்து, அரையிறுதியில் பிரான்ஸிடம் 1-2 என தோல்வியைத் தழுவி, மூன்றாவது இடத்துக்கான ஆட்டத்தில் நெதர்லாந்தை 2-1 என வீழ்த்தி, 3-வது இடத்தை குரோஷியா பிடித்தபோது, மூக்கின்மேல் விரலை வைக்காதவர்களே இல்லை.

ஆம். கலந்து கொண்ட முதல் உலகக்கோப்பைப் போட்டியிலேயே குரோஷியாவுக்கு மூன்றாவது இடம். அந்த உலகக்கோப்பைப் போட்டியில் குரோஷிய வீரர் டெவர் சுகர் 6 கோல்கள் அடித்து தங்கக் காலணியை வென்றது தனிக்கதை.

அதன்பிறகு யார் கண்பட்டதோ தெரியவில்லை? 2002, 2006 உலகக்கோப்பைப் போட்டிகளில், குரூப் சுற்றிலேயே குரோஷியா வெளியேறியது. 2010 உலகக்கோப்பைப் போட்டியில் விளையாடக்கூட குரோஷியா தகுதி பெறவில்லை. 2014ல் மீண்டும் குரூப் சுற்றிலேயே தோல்வி…வெளியேற்றம்...

ஆனால், கடந்த 2018 உலகக்கோப்பை போட்டி, குரோஷிய அணியால் மறக்க முடியாத, மிகச்சிறந்த உலகக்கோப்பைப் போட்டி. காரணம் 2018-ல், இறுதிப்போட்டி வரை முன்னேறிய குரோஷியா, பிரான்சிடம் 4-2 என தோல்வியைத் தழுவி 2-வது இடத்தைப் பிடித்தது.

குரோஷியாவின் தேசியக் கொடியில் செஸ் கட்டங்கள் போன்ற வடிவம் உண்டு. குரோஷியக் கால்பந்தாட்ட வீரர்களின் சட்டைகளையும் இந்த கட்டங்கள் தவறாமல் அலங்கரிக்கும். 

உலகக் கோப்பைப் போட்டிகளில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய இந்த ‘சதுரங்கச் சட்டைக்காரர்கள்’, இதுவரை 23 உலகக்கோப்பை ஆட்டங்களில், 35 கோல்களை அடித்தவர்கள். 

நடப்பு கத்தார் 2022 உலகக்கோப்பைப் போட்டி, குரோஷியாவுக்கு 6-வது உலகக்கோப்பைப் போட்டி என்ற நிலையில், அரையிறுதி வரை அழகாக முன்னேறி வந்த குரோஷிய அணி, ஆர்ஜென்டீனாவிடம் 3-0 என தோல்வியைத் தழுவி, இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்துள்ளது.

லூகா மோட்ரிச்
லூகா மோட்ரிச்

‘எல்லா ஹீரோக்களும் தொப்பி அணிவதில்லை’ என்று ஒரு சொலவடை உண்டு. அது போல, போர்ச்சுகலின் ரொனால்டோ, ஆர்ஜென்டீனாவின் மெஸ்ஸி போன்றவர்களுக்கும் இது கடைசி உலகக்கோப்பைப் போட்டி என்ற நிலையில், அவர்களைத் தவிர உருகுவேயின் சுவாரெஸ், எடின்சன் கவானி, போர்ச்சுகல்லின் பெப்பே, ஆர்ஜென்டினாவின் ஏங்கல் டி மரியா, பெல்ஜியத்தின் ஈடன் ஹசார்ட். பிரேசிலின் தியாகோ சில்வா போன்ற இன்னும் பலப்பல வீரர்களுக்கும் இதுதான் கடைசி உலகக்கோப்பைப் போட்டி.  

இவர்களில் குரோஷிய அணியின் தலைவரான லூகா மோட்ரிச்சும் ஒருவர். இதுதான் கடைசி உலகக்கோப்பைப் போட்டி என்ற நிலையில், இன்றைய மூன்றாவது இடத்துக்கான போட்டியில் மொராக்கோவுடன் மோதுகிறது குரோஷிய அணி.

கடந்த உலகக்கோப்பைப் போட்டியில் 2-வது இடத்தைப் பிடித்த குரோஷிய அணி, இந்தமுறை 3-வது இடம்பெற்றால், அது அந்த அணிக்குச் சறுக்கல்தான். ஆனால், லூகா மோட்ரிச்சுக்குப் பிரியாவிடைப் பரிசாக, இந்த 3-வது இடம் அமையும். அதற்காக, குரோஷிய அணி வீரர்கள் முழுமையாகப் போராடுவார்கள் என எதிர்பார்க்கலாம். 

மொராக்கோ அணியைப் பொறுத்தவரை, அது முதல்முதலாக அரையிறுதியைத் தொட்ட ஆப்பிரிக்க அணி. அந்த அணிக்கு 3-வது இடம் கிடைத்தால் அது மிகப்பெரிய பெருமை. அந்தப் பெருமையைப் பெற மொராக்கோ அணியும் முழுமூச்சாகப் போராடும் என எதிர்பார்ப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com