சந்தோஷத்தில் மண் அள்ளிப் போடுவதா?: அஸ்வின் கேள்வி!

அவர் என்னை விடப் பெரியவர். ஒருவர் சந்தோஷமாக இருந்தால் அதைப் பார்த்து நீங்களும் சந்தோஷமாக இருங்கள்...
சந்தோஷத்தில் மண் அள்ளிப் போடுவதா?: அஸ்வின் கேள்வி!

தமிழ்நாடு கிரிக்கெட் வீரர் ஜெகதீசன் சாதனை செய்யும்போது தமிழ்நாடு கிரிக்கெட் பற்றி விமர்சனம் செய்வது ஏன் என பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார். 

அருணாசல பிரதேச அணிக்கு எதிராக தமிழக அணி 50 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 506 ரன்கள் எடுத்து புதிய உலக சாதனை படைத்தது. தமிழகத் தொடக்க வீரர் ஜெகதீசன் 277 ரன்கள் எடுத்து அவரும் உலக சாதனை நிகழ்த்தினார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 5 சதங்கள் எடுத்த முதல் வீரர் என்கிற உலக சாதனையைப் படைத்தார் ஜெகதீசன். விஜய் ஹசாரே போட்டியிலும் தொடர்ச்சியாக 5 சதங்கள் எடுத்த முதல் வீரர் என்கிற பெருமையை அடைந்தார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற புதிய உலக சாதனையையும் படைத்தார். இதற்கு முன்பு சர்ரே அணியைச் சேர்ந்த ஏடி பிரெளன் 2022-ல் 268 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. முதல் விக்கெட்டுக்கு ஜெகதீசனும் சாய் சுதர்சனும் 38.3 ஓவர்களில் 416 ரன்கள் எடுத்தார்கள். இதுவும் ஓர் உலக சாதனை தான். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இதற்கு முன்னால் எந்தவொரு ஜோடியும் இத்தனை ரன்கள் எடுத்ததில்லை. தமிழக அணி 50 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 506 ரன்கள் குவித்தது. இதற்கு முன்னால் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 498 ரன்கள் எடுத்திருந்ததே சாதனையாக இருந்தது.

இந்நிலையில் ஜெகதீசன் சாதனை படைத்த நாளன்று தமிழ்நாடு கிரிக்கெட்டைப் பற்றி விமர்சனம் செய்த மும்பையைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளரைப் பற்றி அஸ்வின் தனது யூடியூப் சேனலில் பேசியதாவது:

ஜெகதீசன் தொடர்ந்து 5 லிஸ்ட் ஏ சதங்களை அடித்துள்ளார். இதற்கு முன்பு யாரும் இதைச் செய்தது கிடையாது. ஒருவர் வெற்றியடைந்தால் பக்கத்து வீட்டில் பொறாமையில் பேசுவார்கள். மும்பையைச் சேர்ந்த கிரிக்கெட்டுடன் தொடர்புடைய ஒருவர், மும்பை கிரிக்கெட் மீது மிகுந்த பற்றுடையவர். ஏன், எனக்கே மும்பை கிரிக்கெட் மீது பற்று உண்டு. ஏனெனில் அதுவும் இந்தியாவில் தானே உள்ளது. அவ்வளவு ரஞ்சி போட்டிகளை ஜெயித்துள்ளார்கள். ஒருவர் சந்தோஷமாக இருக்கும்போது அவர் வீட்டில் குண்டு போட்டு வருவது போல செய்திருக்கிறார். இதுபோன்ற குணாதிசயங்களை நாம் எடுத்துக்கொள்ளவே கூடாது. 88 வருட ரஞ்சி வரலாற்றில் தமிழ்நாடு இருமுறை மட்டுமே கோப்பையை வென்றுள்ளது என்று அவர் ஒரு ட்வீட் வெளியிட்டார். இது எதற்கு இன்றைக்கு? 

ஜெகதீசன்
ஜெகதீசன்

ரஞ்சி போட்டியில் தமிழ்நாடு தோற்கும்போது அவர் அதை வெளிப்படுத்தலாம். இன்று ஜெகதீசன் தன் வீட்டில் சந்தோஷமாக இருக்க வேண்டும் அல்லவா. அவர் சந்தோஷத்தில் ஏன் மண் அள்ளிப் போட வேண்டும்? தமிழ்நாடும் இந்தச் சாதனைக்கு சந்தோஷமாக இருக்கட்டுமே. அவருடைய ட்வீடுக்கு அபினவ் முகுந்த் பதில் அளித்ததுதான் இன்னும் சிறப்பு. 20 வருட விஜய் ஹசாரே போட்டி வரலாற்றில் தமிழக அணி 5 முறை மட்டுமே கோப்பைகளை வென்றுள்ளது என நக்கல் கலந்து ட்வீட் வெளியிட்டார். அந்த நக்கலே குறைவு என்பேன். அபினவ் முகுந்துக்குப் பாராட்டுகள். இதுபோன்ற விஷயங்களை நாம் ஊக்கப்படுத்தவே கூடாது. ஏனெனில் யாராவது நன்றாக விளையாடினால் அவர்களைப் பாராட்ட வேண்டும். உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் அமைதியாக இருக்க வேண்டும். இப்படிச் சுட்டிக்காட்டுவதாக எண்ண வேண்டாம். அவர் என்னை விடப் பெரியவர். ஒருவர் சந்தோஷமாக இருந்தால் அதைப் பார்த்து நீங்களும் சந்தோஷமாக இருங்கள். வயதானவரை இப்படிப் பேசுகிறேன் என்று நினைத்தால் மன்னித்துக்கொள்ளுங்கள். ஜெகதீசனும் சாய் சுதர்சனும் நன்றாக விளையாடுகிறார்கள். தமிழ்நாடு அடுத்தக்கட்டத்துக்குத் தகுதியடைந்துள்ளது. இன்னொருமுறை விஜய் ஹசாரே போட்டியை தமிழ்நாடு வெல்லவேண்டும் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com