பிரான்ஸ் அபார வெற்றி: ஆஸி.யை வீழ்த்தியது (4-1)
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக புதன்கிழமை அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது நடப்பு சாம்பியன் பிரான்ஸ்.


பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக புதன்கிழமை அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது நடப்பு சாம்பியன் பிரான்ஸ்.
மாஸ்கோவில் 2018-இல் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் பிரான்ஸ் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இந்நிலையில் தனது பட்டத்தை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியாக குரூப் டி பிரிவு தொடக்க ஆட்டத்தில் ஓசேனியா அணியான ஆஸ்திரேலியாவுடன் மோதியது.
அல் ஜனோப் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸி. வீரர் கிரெய்க் குட்வின் 9-ஆவது நிமிஷத்திலேயே தனது அணிக்கு கோலடித்து பிரான்ஸýக்கு அதிர்ச்சி அளித்தார்.
இதைத்தொடர்ந்து சுதாரித்துக் கொண்ட உலக சாம்பியன் பிரான்ஸ் வீரர் தியோ அளித்த பாஸை பயன்படுத்தி 27-ஆவது நிமிஷத்தில் கோலடித்தார் மிட்பீல்டர் அட்ரியன் ரபியோட். அடுத்த சிறிது நேரத்திலேயே 32-ஆவது நிமிஷத்தில் அற்புதமாக கோலடித்தார் ஒலிவியர் ஜிரெளட். இதன் மூலம் 2-1 என முன்னிலை பெற்றது பிரான்ஸ்.
பிரான்ஸ் 4-1 அபார வெற்றி: இரண்டாவது பாதி ஆட்டத்திலும் ஆஸி. அணியினர் கோல் போட மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை. 68-ஆவது நிமிஷத்தில் உஸ்மான் டெம்ப்ளே கடத்தி அனுப்பிய பந்தை தலையால் முட்டி அற்புதமாக கோலாக்கினார் இளம் நட்சத்திர வீரர் கிளியன் மாப்பே.
71-ஆவது நிமிஷத்தில் மாப்பே அனுப்பிய பாஸை பயன்படுத்தி தனது இரண்டாவது கோலடித்தார் ஜிரெளட். இதன் மூலம் 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது பிரான்ஸ். கரீம் பென்ஸமா, போக்பா போன்ற நட்சத்திர வீரர்கள் இல்லாத நிலையில் களமிறங்கியுள்ளது பிரான்ஸ்.
ஜிரெளட் சாதனை

சர்வதேச அளவில் அதிக கோல்கள் அடித்த பிரான்ஸ் வீரர் என்ற சாதனை தியரி ஹென்றி வசம் (51 கோல்கள் உள்ளது). இந்த ஆட்டத்தில் இரண்டு கோல்கள் அடித்ததின் மூலம் 51 கோல்களுடன் சாதனை படைத்துள்ளார் ஒலிவியர் ஜிரெளட்.
காயத்துடன் வெளியேறினார் ஹெர்னான்டஸ்

வலது கால் முட்டியில் காயம் ஏற்பட்டதால், தொடர்ந்து உலகக் கோப்பையில் பங்கேற்க முடியாமல் சோகத்துடன் வெளியேறினார் பிரான்ஸ் நட்சத்திர வீரர் லுகாஸ் ஹெர்னான்டஸ்.
இந்த வெற்றியுடன் குரூப் டி பிரிவில் பிரான்ஸ் 3 புள்ளிகளுடன் முதலிடத்திலும், துனிசியா, டென்மார்க் தலா 1 புள்ளியுடன் இரண்டாவது இடத்திலும், ஆஸி. கடைசி இடத்திலும் உள்ளன.
மொராக்கோவுக்கு எதிரான குரோஷியாவின் போராட்டம் வீண்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் நான்காம் நாளான புதன்கிழமை முதல் ஆட்டத்தில் குரூப் எஃப் பிரிவில் 2018 ரன்னர் அப் அணியான குரோஷியாவும்-ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த மொராக்கோவும் மோதின. இதில் எளிதாக வென்று விடலாம் என எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர் லுகா மொட்ரிக் தலைமையிலான குரோஷிய அணியில் கடந்த உலகக் கோப்பையில் ஆடிய 4 வீரர்களும் இடம் பெற்றிருந்தனர்.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அல்பயத் மைதானத்தில் நடைபெற்றது. மொராக்கோவின் அனுபவ தற்காப்பு வீரர் டேஜன் லொவ்ரேனை மீறி குரோஷிய வீரர்களால் கோலடிக்க முடியவில்லை.
குரோஷிய அணி வசமே பந்து பெரும்பாலும் இருந்தது. மொராக்கோ வீரர்கள் அஸிதின் உனாஹி, ஹக்கீம் ஸியெச், அச்ரஃப் ஹகிமி ஆகியோர் தங்கள் அணிக்கு கோல் போட முயன்றனர். ஆனால் அவர்களது முயற்சி வீணானது. மற்றொரு வீரர் சலீம் அமல்லா அடித்த பந்தை பறித்து குரோஷிய வீரர் இவான் பெரிஸிக் கோலடிக்க முயன்றபோது, அதை கோல்கீப்பர் யாசீன் பெளனெள தடுத்து விட்டார்.
தனது நான்காவது உலகக் கோப்பை போட்டியில் ஆடும் கேப்டன் மொட்ரிக்கும் கோலடிக்க முடியவில்லை.
இறுதியில் ஆட்டநேர முடிவில் 0-0 என கோலின்றி டிராவில் முடிந்தது குரோஷிய-மொராக்கோ ஆட்டம்.
இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி கிடைத்தன.
கடைசி கட்டத்தில் ஜெர்மனிக்கு அதிர்ச்சி அளித்த ஜப்பான்!

தோஹா, நவ. 23: கடைசி நேரத்தில் 2 கோல்களை அடித்து 4 முறை உலக சாம்பியன் ஜெர்மனியை வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியம் அளித்தது ஜப்பான்.
தோஹாவின் கலிஃபா சர்வதேச மைதானத்தில் குரூப் இ பிரிவில் இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றது. நான்கு முறை உலக சாம்பியன் ஜெர்மனி வழக்கம் போல் ஆதிக்கம் செலுத்தி ஆடியது.
முதல் பாதி ஆட்டத்தில் 33-ஆவது நிமிஷத்தில் பெனால்டி கிக் வாய்ப்பின் மூலம் முதல் கோலடித்தார் ஜெர்மன் வீரர் இல்கே குண்டோகன். ஜெர்மனி வீரர் டேவிட் ரவுமை ஜப்பான் கோல் கீப்பர் கீழே தள்ளியதால் பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.
81 சதவீதம் பந்து ஜெர்மனி வசமே இருந்தது. ஜப்பான் வீரர்களால் பதில் கோல் போட முடியவில்லை. ஜெர்மனி வீரர் கெய் ஹேவர்ட்ஸ் அடித்த கோல் ஆஃப்சைட் என அறிவிக்கப்பட்டது ஏமாற்றத்தை தந்தது.
இரண்டாம் பாதி ஆட்டத்தில் ஜெர்மனி வீரர் ஜமால் முஸைலா அடித்த பந்து கிராஸ் பாருக்கு மேலே சென்றதால் இரண்டாவது கோல் வாய்ப்பு ஜெர்மனிக்கு கிடைக்கவில்லை.
எனினும் ஜப்பான் அணியினர் பதில் கோல் போட தொடர்ந்து முயன்றது பலனைத் தந்தது.75-ஆவது நிமிஷத்தில் அதன் வீரர் டகுமி மினா மினோ அடித்த முதல் பந்தை ஜெர்மன் கோல்கீப்பர் மானுவேல் நியுர் தடுத்தார். ஆனால் அதில் கிடைத்த ரிபெளன்ட் பிசகின்றி கோலாகினார் ரிட்ஸý டோவன். இதனால் 1-1 என சமநிலை ஏற்பட்டது.
ஜப்பான் அபாரம் 2-1 வெற்றி: இதனால் உற்சாகம் அடைந்த ஜப்பான் தரப்பினர் தங்கள் முயற்சியை தீவிரப்படுத்தினர். 83-ஆவது நிமிஷத்தில் டகுமோ அஸனோ லாங் பாஸை கோலாக்கினார். இதுவே ஜப்பானின் வெற்றி கோலாகவும் மாறியது.
இரண்டாவது பெரிய அதிர்ச்சி: கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டியில் பலமான ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி முதல் அதிர்ச்சி அளித்தது சவுதி அரேபியா. இதன் தொடர்ச்சியாக 4 முறை உலக சாம்பியன் ஜெர்மனியை 2-1 என வீழ்த்தி இரண்டாவது பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது ஜப்பான்.
நாக் அவுட் சுற்றுக்கு ஜெர்மனி முன்னேறுவதில் சிக்கல்: குரூப் இ பிரிவில் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது. ஜெர்மனி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் பலமான ஸ்பெயினையும், கத்துக்குட்டி அணியான கோஸ்டா ரிகாவையும் வெல்ல வேண்டும்.
துணுக்குகள்...
பெண் நடுவர்கள்...

முதன்முறையாக உலகக்கோப்பை போட்டியில் 3 பெண்கள் நடுவர்களாக செயல்படுகின்றனர். ஆண், பெண் சமத்துவத்தை உறுதி செய்யும் வகையில்
ஸ்டெப்பானி (பிரான்ஸ்), சலீமா முகன்சங்கா (ருவாண்டா), யோஷிமி யமஷிடா (ஜப்பான்) ஆகியோர் 36 பேர் கொண்ட நடுவர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
எதிர்ப்பு...

ஓரினச் சேர்க்கையாளர்கள் (எல்ஜிபிடிகியு) பிரிவினர் கத்தாரில் சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன் லவ் ஆர்ம்பேண்ட் என தோள்பட்டையை அணிய வேண்டும் என 7 ஐரோப்பிய கால்பந்து சங்கங்கள் அறிவித்திருந்தன. ஆனால், அவ்வாறு அணிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிஃபா எச்சரித்ததால், தோள்பட்டையை அணியவில்லை. ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் ஜெர்மன் வீரர்கள் தொடக்கத்தில் தங்கள் கையால் வாயை மூடிக்கொண்டு எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
இன்றைய ஆட்டங்கள்...
சுவிட்சர்லாந்து-கேமரூன் மாலை 3.30
உருகுவே-தென் கொரியா மாலை 6.30
போர்ச்சுகல்-கானா இரவு 9.30
பிரேஸில்-செர்பியா நள்ளிரவு 12.30 (25/11).
நேரடி ஒளிபரப்பு: ஸ்போர்ட்ஸ் 18, ஜியோ சினிமா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...