மகளிர் ஆசியக் கோப்பை டி20 போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக 178 ரன்கள் எடுத்துள்ளது இந்திய அணி.
முதல் ஆட்டத்தில் இலங்கையை எளிதாக வீழ்த்திய இந்திய மகளிர் அணி, 2-வது ஆட்டத்தில் மலேசியாவை 30 ரன்கள் வித்தியாசத்தில் (டி/எல் முறையில்) தோற்கடித்தது. 3-வது ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொள்கிறது.
இந்த ஆட்டத்தில் ஹர்மன்ப்ரீத்துக்குப் பதிலாக மந்தனா கேப்டனாகச் செயல்படுகிறார். மேலும் ஷெஃபாலி வர்மா, ராதா யாதவ், மேக்னா சிங் ஆகியோருக்கும் இந்த ஆட்டத்தில் விளையாடுவதிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. புள்ளிகள் பட்டியலில் பாகிஸ்தானும் இந்தியாவும் முதல் இரு இடங்களைப் பிடித்துள்ளன. இலங்கைக்கு எதிரான முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் தோல்வியடைந்தது.
டாஸ் வென்ற கேப்டன் மந்தனா பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய மகளிர் அணி முதல் 3 விக்கெட்டுகளை 20 ரன்களுக்கு இழந்து தடுமாறியது. இதன்பிறகு தீப்தி சர்மாவும் ஜெமிமாவும் அருமையான கூட்டணி அமைத்தார்கள். 49 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து தீப்தி ஆட்டமிழந்தார். ஜெமிமா 45 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜெமிமா - தீப்தி சர்மா கூட்டணி 81 பந்துகளில் 128 ரன்கள் எடுத்து அசத்தியது. இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது.