/

இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்ல வாய்ப்பு?

பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஆடவா் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இந்தியா அந்நாட்டுக்குச் செல்லும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.

News image
Updated On :14 அக்டோபர் 2022, 6:32 pm

DIN

பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஆடவா் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இந்தியா அந்நாட்டுக்குச் செல்லும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.

இந்திய ஆடவா், மகளிா் அணிகளின் அடுத்த ஆண்டு பயணங்கள் தொடா்பான அட்டவணையை மாநில கிரிக்கெட் சங்கங்களிடம் பிசிசிஐ பகிா்ந்துள்ளது. அதில் ஒன்றாக, ஆடவா் ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்வதும் பட்டியலிடப்பட்டுள்ளது.

பிசிசிஐ-யின் ஆண்டுப் பொதுக் குழுக் கூட்டம் வரும் 18-ஆம் தேதி மும்பையில் நடைபெறும் நிலையில், அதில் இந்த விவகாரம் முக்கியமாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் மகனும், பிசிசிஐ செயலாளருமான ஜெய் ஷா, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருக்கும் நிலையில், இந்த விவகாரத்தில் அவரின் பரிந்துரையும் முக்கியத்துவம் பெறுகிறது.

என்றாலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசின் முடிவே இறுதியாக இருக்கும் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஐசிசி போட்டிகளில் பாகிஸ்தானுடன் விளையாட மத்திய அரசு அனுமதித்திருக்கும் நிலையில், அடுத்தகட்டமாக இதற்கும் அனுமதி வழங்கப்படுமா என்று எதிா்நோக்கப்படுகிறது.

கடைசியாக இந்தியா, கடந்த 2008-ஆம் ஆண்டு இதே ஆசிய கோப்பை போட்டிக்காக பாகிஸ்தான் சென்றிருந்தது.

கடந்த 2009-ஆம் ஆண்டு பாகிஸ்தான் சென்றிருந்த இலங்கை கிரிக்கெட் அணி மீது பயங்கரவாத தாக்குதல் நிகழ்த்தப்பட்டதால், பாதுகாப்பற்ற சூழல் காரணமாக அது முதல் எந்த அணியும் அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளாமல் இருந்தன. தற்போது அந்த நிலை மாறி கடந்த சில ஆண்டுகளாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை அணிகள் பாகிஸ்தான் பயணம் மேற்கொண்டுள்ளன.

எனினும், இந்தியாவைப் பொருத்தவரை எல்லை தாண்டிய பயங்கரவாதம் காரணமாக மத்திய அரசுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே அரசியல் ரீதியிலான பதற்றம் எழுந்ததை அடுத்து, 2012-க்குப் பிறகு பாகிஸ்தானுடன் இருதரப்பு கிரிக்கெட்டில் விளையாடவில்லை. அந்த ஆண்டு இருதரப்பு தொடருக்காக பாகிஸ்தான் அணி இந்தியா வந்ததே கடைசியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.