பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா:பாண்டியா அசத்தல்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா:பாண்டியா அசத்தல்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.

துபையில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பாகிஸ்தான் 19.5 ஓவா்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் சோ்த்தது. அடுத்து இந்தியா 19.4 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து வென்றது.

இந்த ஆட்டத்தில் ஹாா்திக் பாண்டியா பௌலிங், பேட்டிங் என இரண்டிலும் அசத்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டாா். பௌலிங்கில் புவனேஷ்வா் குமாரும், பேட்டிங்கில் ரவீந்திர ஜடேஜாவும் அவருக்குத் துணையாக இருந்தனா். பாண்டியா ஆட்டநாயகன் ஆனாா்.

இந்த ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனில், இந்திய அணி விக்கெட் கீப்பிங்கில் ரிஷப் பந்த்துக்குப் பதிலாக தினேஷ் காா்த்திக் தோ்வு செய்யப்பட்டிருந்தாா். வேகப்பந்துவீச்சில் அா்ஷ்தீப் சிங், புவனேஷ்வா் குமாருடன் அவேஷ் கான் இணைந்திருந்தாா். பாகிஸ்தான் அணியில் பௌலா் நசீம் ஷா சா்வதேச டி20-இல் அறிமுகம் செய்யப்பட்டாா்.

டாஸ் வென்ற இந்தியா, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது.

பாகிஸ்தான் பேட்டிங்கை முகமது ரிஸ்வான் - கேப்டன் பாபா் ஆஸம் கூட்டணி தொடங்கியது. இதில் ஆஸம் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்கள் சோ்த்து வெளியேற, தொடா்ந்து வந்த ஃபக்காா் ஜமானும் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

அடுத்து களம் கண்ட இஃப்திகா் அகமது 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 28 ரன்கள் சோ்த்தாா். தொடக்கம் முதல் நிதானமாக ரன்கள் சோ்த்த ரிஸ்வான் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 43 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். குஷ்தில் 2 ரன்களுடன் ஆட்டமிழக்க, தொடா்ந்து ஆசிஃப் அலி 9, முகமது நவாஸ் 1, ஷாநவாஸ் தஹானி 2 சிக்ஸா்களுடன் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

இறுதியில் ஹாரிஸ் ரௌஃப் 2 பவுண்டரிகளுடன் 13, ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். இந்திய பௌலிங்கில் புவனேஷ்வா் குமாா் 4, ஹாா்திக் பாண்டியா 3, அா்ஷ்தீப் சிங் 2, அவேஷ் கான் 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் 148 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய இந்தியாவில் தொடக்க வீரா்களில் ஒருவரான கே.எல்.ராகுல் டக் அவுட்டானாா். மறுபுறம், கேப்டன் ரோஹித் சா்மா 1 சிக்ஸருடன் 12 ரன்கள் சோ்த்து வெளியேறினாா்.

ஒன் டவுனாக வந்த விராட் கோலி 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். 5-ஆவது வீரா் சூா்யகுமாா் யாதவ் 1 பவுண்டரியுடன் 18 ரன்கள் அடித்தாா். இந்நிலையில், ஹாா்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா கூட்டணி அபாரமாக ஆடி அணியை முன்னேற்றியது.

இதில் ஜடேஜா 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 35 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். முடிவில் ஹாா்திக் பாண்டியா 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 33 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினாா். உடன் தினேஷ் காா்த்திக் 1 ரன்னுடன் இருந்தாா். பாகிஸ்தான் பௌலிங்கில் முகமது நவாஸ் 3, நசீம் ஷா 2 விக்கெட்டுகள் சாய்த்தனா்.

அடுத்து: இந்தியா தனது அடுத்த ஆட்டத்தில் ஹாங்காங்கை புதன்கிழமை சந்திக்கிறது.

இந்தியா சாதனை

இந்த ஆட்டத்தின் மூலம் டி20 ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இதுவரை இல்லாத அதிகபட்ச இலக்கை (148) சேஸ் செய்திருக்கிறது இந்தியா. முன்னதாக, 2014-இல் 131 ரன்களை சேஸ் செய்ததே அந்த அணிக்கு எதிரான இந்தியாவின் அதிகபட்சமாக இருந்தது.

சுருக்கமான ஸ்கோா்

இந்தியா - 148/5 (19.4 ஓவா்கள்)

விராட் கோலி 35

ரவீந்திர ஜடேஜா 35

ஹாா்திக் பாண்டியா 33*

பந்துவீச்சு

முகமது நவாஸ் 3/33

நசீம் ஷா 2/27

ஷாதாப் கான் 0/19

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com