இவருக்காக 2-வது டெஸ்டை வெல்லுங்கள்: இந்திய அணிக்கு கவாஸ்கர் கோரிக்கை

தென்னாப்பிரிக்காவில் இந்திய அணி வெற்றி பெற்றதேயில்லை. சில டெஸ்டுகளில் வென்றுள்ளது.
இவருக்காக 2-வது டெஸ்டை வெல்லுங்கள்: இந்திய அணிக்கு கவாஸ்கர் கோரிக்கை

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது டெஸ்டை கபில் தேவுக்காக இந்திய அணி வெல்லவேண்டும் என முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான கவாஸ்கர் கூறியுள்ளார்.

ஜொகன்னஸ்பர்க்கில் நடைபெறும் 2-வது டெஸ்டில் மழை காரணமாக 4-ம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. செஞ்சுரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் ஜொகன்னஸ்பர்க்கில் திங்கள் அன்று தொடங்கியது.

இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. காயம் காரணமாக இந்த டெஸ்டிலிருந்து விராட் கோலி விலகியுள்ளார். இதனால் கே.எல். ராகுல் கேப்டனாகக் களம் இறங்கினார். டாஸ் வென்ற ராகுல், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் கோலிக்குப் பதிலாக ஹனுமா விஹாரி தேர்வானார். தெ.ஆ. அணியில் ஓய்வு பெற்ற டி காக்குக்குப் பதிலாக கைல் வெரீனும் முல்டருக்குப் பதிலாக ஆலிவியரும் தேர்வானார்கள்.  

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 202 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ராகுல் 50, அஸ்வின் 46 ரன்கள் எடுத்தார்கள். தெ.ஆ. தரப்பில் ஜேன்சன் 4 விக்கெட்டுகளும் ரபாடா, ஆலிவியர் தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள். தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 229 ரன்கள் எடுத்தது. பீட்டர்சன் 62, பவுமா 51 ரன்கள் எடுத்தார்கள். ஷர்துல் தாக்குர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 

இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 60.1 ஓவர்களில் 266 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. விஹாரி ஆட்டமிழக்காமல் 6 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்தார். ரஹானே 58, புஜாரா 53 ரன்கள் எடுத்தார்கள். தெ.ஆ. தரப்பில் ரபாடா, என்கிடி, ஜான்சன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 2-வது டெஸ்டில் தெ.ஆ. அணி வெற்றி பெற 240 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 

தென்னாப்பிரிக்க அணி 3-ம் நாள் முடிவில் தனது 2-வது இன்னிங்ஸில் 40 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்தது. எல்கர் 46, வான் டர் டுசென் 11 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த பரபரப்பான 4-ம் நாள் ஆட்டம் மழை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. காலை 11 மணி வரை அங்கு மழை பெய்து வருவதால் 4-ம் நாள் ஆட்டம் தொடங்கவில்லை. மழை நின்றால் உணவு இடைவேளைக்குப் பிறகு  ஆட்டம் தொடங்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் கபில் தேவுக்காக 2-வது டெஸ்டை இந்திய அணி வெல்லவேண்டும் என முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான கவாஸ்கர் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:

இந்தியாவின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரரான கபில் தேவ் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். 2-வது டெஸ்டை இந்திய அணி வெல்வது கபில் தேவுக்கான சிறந்த பிறந்த நாள் பரிசாகும். இந்திய அணியில் கபில் தேவை உயர்வாக எண்ணுபவர்கள் பலர் உள்ளார்கள். எனவே டெஸ்ட் வெற்றி என்பது கபில் தேவுக்கான அட்டகாசமான பரிசாக அமையும். தென்னாப்பிரிக்காவில் இந்திய அணி வெற்றி பெற்றதேயில்லை. சில டெஸ்டுகளில் வென்றுள்ளது. 2018-ல் இங்கு வந்தபோது ஒருநாள் தொடரில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரில் இந்தியா தோற்றது. எனவே டெஸ்ட் தொடரை வெல்வது மிகப்பெரிய சாதனையாக இருக்கும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com