அடுத்த இந்திய கேப்டனா?: பும்ரா பதில்
By DIN | Published On : 17th January 2022 04:42 PM | Last Updated : 17th January 2022 04:42 PM | அ+அ அ- |

வருங்காலத்தில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கும் வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டால் அதைக் கெளரவமாகக் கருதுவேன் என இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என வென்று அசத்தியுள்ளது தென்னாப்பிரிக்க அணி. இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் ஜனவரி 19 அன்று தொடங்குகிறது. இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக கே.எல். ராகுலும் துணை கேப்டனாக பும்ராவும் செயல்படவுள்ளார்கள்.
செய்தியாளர்களை இன்று சந்தித்த துணை கேப்டன் பும்ரா கூறியதாவது:
டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக கோலி எடுத்த முடிவை மதிக்கிறோம். அணிக் கூட்டத்தில் இதைப் பற்றி சொன்னார். அவருடைய சாதனைகளுக்காக அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தோம். அவருடைய முடிவு சரியா தவறா என நான் கருத்து கூற முடியாது. கோலியுடன் இணைந்து விளையாடுவது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாகும். அவர் கேப்டனாக இருந்தபோது டெஸ்ட் அணிக்கு அறிமுகமானேன். அணியில் ஓர் முக்கிய உறுப்பினராக அவர் எப்போதும் இருப்பார்.
அணிக்குத் தலைமை தாங்கும் ஆசை எல்லோருக்கும் இருக்கும். என்றாவது ஒருநாள் அணிக்குத் தலைமை தாங்கும் வாய்ப்பு கிடைத்தால் அதைக் கெளரவமாகக் கருதுவேன்.