இருவரும் மனம் விட்டுப் பேசுங்கள்: கோலி, கங்குலிக்கு கபில் தேவ் அறிவுரை

நாட்டையும் அணியையும் முன்னிறுத்துங்கள்.
இருவரும் மனம் விட்டுப் பேசுங்கள்: கோலி, கங்குலிக்கு கபில் தேவ் அறிவுரை

விராட் கோலியும் செளரவ் கங்குலியும் மனம் விட்டுப் பேசி கருத்துவேறுபாடுகளைக் களைய வேண்டும் என முன்னாள் வீரர் கபில் தேவ் கூறியுள்ளார்.

டி20 உலகக் கோப்பைப் போட்டி தொடங்கு முன்பு, டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் விராட் கோலி. அடுத்ததாக, ஐபிஎல் 2021 போட்டிக்குப் பிறகு ஆர்சிபி அணி கேப்டன் பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார். டி20 கேப்டன் பதவியை உதறிய பிறகு கோலி கூறியதாவது: இந்திய டெஸ்ட், ஒருநாள் அணிகளை வழிநடத்த டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன். இதுபற்றி ரவி சாஸ்திரி, ரோஹித் சர்மாவிடம் விவாதித்த பிறகே இம்முடிவை எடுத்தேன். கங்குலி, ஜெய் ஷா, தேர்வுக்குழுவினர் ஆகியோரிடமும் இதுபற்றி தகவல் தெரிவித்துள்ளேன். இந்திய அணிக்காகத் தொடர்ந்து என்னுடைய திறமையை வெளிப்படுத்துவேன் என்றார். டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகினாலும் ஒருநாள் அணிக்குத் தலைமை தாங்க தனது விருப்பத்தைத் தெரிவித்தார். ஆனால் டிசம்பர் மாதம் காட்சிகள் எல்லாம் மாறின. 

கோலியின் முடிவுக்குப் பிறகு இந்திய டி20 அணி கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். இச்சமயத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் கேப்டனாக ரோஹித் சர்மாவை நியமித்து சர்ச்சையை ஏற்படுத்தியது பிசிசிஐ. இதனால் 2023 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியை வழிநடத்த வேண்டும் என்று ஆசைப்பட்ட கோலியின் கனவு தகர்ந்தது. 

டி20 கேப்டன் பதவியிலிருந்து கோலி விலகிய பிறகு பேட்டியளித்த கங்குலி, டி20 கேப்டன் பதவியில் நீடிக்குமாறு கூறினோம். ஆனால் கோலி அந்த முடிவை ஏற்கவில்லை என்றார். ஒருநாள், டி20 என இரண்டுக்கும் வெவ்வேறு கேப்டன்கள் இருப்பதைத் தேர்வுக்குழுவினர் விரும்பவில்லை. அதனால் தான் ஒருநாள், டி20 ஆகிய அணிகளின் கேப்டனாக ரோஹித் சர்மாவை நியமித்தோம் எனப் புதிய முடிவுக்கு விளக்கம் அளித்தார்.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்குப் புறப்படும் முன்பு செய்தியாளர்களை இணையம் வழியாகச் சந்தித்த விராட் கோலி, வெளிப்படையாகப் பேசி அதிர்வலைகளை உருவாக்கினார். கோலி கூறியதாவது:

 டிசம்பர் 8 அன்று தேர்வுக்குழு கூடுவதற்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பு தேர்வுக்குழுவினர் என்னைத் தொடர்பு கொண்டார்கள். டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகியது முதல் எவ்வித தகவலும் எனக்கு அளிக்கப்படவில்லை. தெ.ஆ. தொடருக்கான டெஸ்ட் அணி பற்றி தேர்வுக்குழுத் தலைவர் என்னிடம் விவாதித்தார். இருவரும் அணி பற்றிய விவரங்களை ஏற்றுக்கொண்டோம். அந்த தொலைபேசி அழைப்பு முடியும் முன்பு, ஒருநாள் கேப்டன் பதவியில் நான் இல்லை என்பதை ஐந்து தேர்வுக்குழு உறுப்பினர்களும் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. அப்படியா நல்லது எனப் பதில் அளித்தேன். டி20 கேப்டன் பதவியிலிருந்து நான் விலகியபோது அதை நன்கு வரவேற்றார்கள். முற்போக்கான முடிவு எனப் பாராட்டப்பட்டது. டி20 கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டாம் என என்னிடம் யாரும் சொல்லவில்லை என்றார். 

டி20 கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டாம் என கோலியிடம் கோரிக்கை வைத்ததாக செளரவ் கங்குலி கூறிய நிலையில் விராட் கோலி இவ்வாறு கூறியது ஆச்சர்யத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. 

இந்நிலையில் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் முன்னாள் வீரர் கபில் தேவ் கூறியதாவது:

டி20 கேப்டன் பதவியிலிருந்து கோலி விலகியபோது அதிக சுமையைத் தாங்குவதாகப் பலரும் கருதினோம். கேப்டன் பதவியை விட்டு விலகவேண்டும் என யாரும் எண்ணவில்லை. அற்புதமான வீரர். அவருடைய முடிவுக்கு மதிப்பளிக்க வேண்டும். 

இருவரும் (கோலியும் கங்குலியும்) மனம் விட்டுப் பேசி பிரச்னையைச் சரி செய்திருக்க வேண்டும். போனை எடுத்து ஒருவருக்கொருவர் பேசுங்கள். நாட்டையும் அணியையும் முன்னிறுத்துங்கள். ஆரம்பத்தில் எனக்கும் கேட்டதெல்லாம் கிடைத்தது. சில நேரங்களில் நீங்கள் கேட்டது கிடைக்காது. அதற்காக கேப்டன் பதவியை விலக வேண்டும் என்பதில்லை. அதனால் தான் அவர் கேப்டன் பதவியை விட்டு விலகியிருந்தால் எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலி நிறைய விளையாடி அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்பது என் விருப்பம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com