இந்தியாவுக்குக் குடியரசு தின வாழ்த்து தெரிவித்த கிறிஸ் கெயில்
By DIN | Published On : 26th January 2022 12:22 PM | Last Updated : 26th January 2022 12:22 PM | அ+அ அ- |

இந்தியாவுக்குத் தனது குடியரசு தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகப் பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார்.
நாடு சுதந்திரமடைந்து 75-வது ஆண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், 73-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையேற்றார். அவா் தேசியக் கொடியை ஏற்றிவைத்து பாதுகாப்புப் படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். ஆண்டுதோறும் இனி ஜனவரி 23-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை ஒரு வார காலத்துக்கு குடியரசு தினத்தைக் கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சுதந்திரப் போராட்ட வீரா் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த தினமான ஜனவரி 23-ம் தேதி தொடங்கும் இந்தக் கொண்டாட்டங்கள் மகாத்மா காந்தியின் நினைவு தினமான (தியாகிகள் தினம்) ஜனவரி 30-ம் தேதி நிறைவடையும்.
இந்நிலையில் இந்தியாவுக்குக் குடியரசு தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில். ட்விட்டரில் அவர் கூறியதாவது:
73-வது குடியரசு தினத்தைக் கொண்டாடும் இந்தியாவுக்கு என்னுடைய வாழ்த்துகள். இன்று காலையில் பிரதமர் மோடியிடமிருந்து தனிப்பட்ட தகவல் எனக்கு வந்தது. அவரிடமும் இந்திய மக்களிடமும் எனக்குள்ள வலுவான பிணைப்பை இது உறுதிப்படுத்துகிறது. அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...