அறிமுக வீரருக்கு 12 விக்கெட்டுகள்: 2-வது டெஸ்டில் இலங்கை அபார வெற்றி

2-வது டெஸ்டை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 39 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரை இலங்கை அணி சமன் செய்துள்ளது.
பிரபாத் ஜெயசூர்யா
பிரபாத் ஜெயசூர்யா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 39 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரை இலங்கை அணி சமன் செய்துள்ளது.

இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்த ஆஸ்திரேலிய அணி 3 டி20, 5 ஒருநாள், 2 டெஸ்டுகளில் விளையாடியது. டி20 தொடரை 2-1 என ஆஸி. அணி வென்றது. ஒருநாள் தொடரில் 2-3 எனத் தோல்வியடைந்தது.

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி. 2-வது டெஸ்ட், காலேவில் நடைபெற்றது. 

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 364 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி, 3-ம் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 431 ரன்களுடன் முன்னிலை பெற்றிருந்தது. தினேஷ் சண்டிமல் 118, மெண்டிஸ் 7 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

4-ம் நாளான இன்று தினேஷ் சண்டிமல் சிறப்பாக விளையாடி இரட்டைச் சதத்தைப் பூர்த்தி செய்தார். இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 181 ஓவர்களில் 554 ரன்கள் குவித்தது. தினேஷ் சண்டிமல் 326 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 16 பவுண்டரிகளுடன் 206 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஸ்டார்க் 4 விக்கெட்டுகளும் ஸ்வெப்சன் 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் முன்னிலை பெற்று ஆதிக்கம் செலுத்தியது. 

2-வது இன்னிங்ஸில் ஆஸி. அணி நன்கு விளையாடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இலங்கைப் பந்துவீச்சாளர்கள் திறமையாகப் பந்துவீசி ஆஸி. பேட்டர்களை நிலைகுலைய வைத்தார்கள். இதனால் ஆஸி. அணி 41 ஓவர்களில் 151 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 2-வது டெஸ்டை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 39 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரை இலங்கை அணி 1-1 என சமன் செய்துள்ளது.

அறிமுக வீரர் பிரபாத் ஜெயசூர்யா இரு இன்னிங்ஸிலும் தலா 6 விக்கெட்டுகள் என 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அறிமுக டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்து சிறப்பாகப் பந்துவீசிய வீரர்களில் 4-ம் இடம் பிடித்துள்ளார். ஆட்ட நாயகன் விருதும் அவருக்கே தரப்பட்டது. தொடர் நாயகனுக்கான விருதுக்கு தினேஷ் சண்டிமல் தேர்வானார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com