உலகக் கோப்பை: காலிறுதி வாய்ப்பை இழந்த இந்திய மகளிர் அணி
By DIN | Published On : 11th July 2022 03:39 PM | Last Updated : 11th July 2022 03:39 PM | அ+அ அ- |

இந்திய மகளிர் ஹாக்கி அணி (கோப்புப் படம்)
ஸ்பெயினில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்து காலிறுதி வாய்ப்பை இழந்தது.
டோக்கியோ ஒலிம்பிக்ஸில் மகளிர் ஹாக்கியின் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவை 4-3 என வீழ்த்தி வெண்கலம் வென்றது இங்கிலாந்து அணி. மகளிர் ஹாக்கியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா 1-2 என்ற கோல் கணக்கில் உலகின் 2-ஆம் நிலை அணியான ஆர்ஜென்டீனாவிடம் வீழ்ந்தது. தனது ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக அரையிறுதி வரை முன்னேறி அனைவருடைய பாராட்டுகளையும் பெற்றது இந்திய மகளிர் ஹாக்கி அணி. மகளிர் ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டியில் காலிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது.
காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான ஆட்டத்தில் இந்தியா - ஸ்பெயின் அணிகள் மோதின. ஏழு அணிகள் காலிறுதிக்கு ஏற்கெனவே தேர்வான நிலையில் இந்த ஆட்டத்தில் வெல்லும் அணி காலிறுதிக்குத் தகுதி பெறும் என்கிற நிலைமை இருந்தது. குரூப் பி பிரிவில் இந்திய அணி 3-ம் இடம் பிடித்தது. இங்கிலாந்து, சீனா அணிகளிடம் தலா 1-1 என டிரா செய்த இந்திய மகளிர் அணி, நியூசிலாந்துக்கு எதிராக 3-4 எனத் தோற்றது.
சொந்த மண்ணில் ரசிகர்களின் ஆதரவுடன் விளையாடிய ஸ்பெயின் அணி, இந்திய கேப்டனும் கோல் கீப்பருமான சவிதா புனியாவின் அற்புதமான ஆட்டத்திறனால் கோல் அடிக்க முடியாமல் திணறியது. ஆட்டத்தின் கடைசிப் பகுதியில் 3 நிமிடங்கள் மீதமுள்ள நிலையில் ஸ்பெய்னின் மார்டா கோல் அடித்தார். இறுதியில் இந்திய மகளிர் அணியை 1-0 என வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதியடைந்தது ஸ்பெயின் அணி.
9-16 இடங்களுக்கான போட்டியில் கனடாவுக்கு எதிராக இந்திய மகளிர் அணி மோதவுள்ளது.