இந்தியாவில் வெள்ளைப் பந்து தொடர்களில் விளையாடும் ஆஸி., தெ.ஆ. அணிகள்!

செப்டம்பர் 20 முதல் 25 வரை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடுகிறது.
இந்தியாவில் வெள்ளைப் பந்து தொடர்களில் விளையாடும் ஆஸி., தெ.ஆ. அணிகள்!

செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க அணிகள் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து வெள்ளைப் பந்து தொடர்களில் விளையாடவுள்ளன. 

இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்துக்கு அடுத்ததாக இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர் ஜூலை 22 அன்றும் (இன்று) டி20 தொடர் ஜூலை 29 அன்றும் தொடங்குகின்றன. இதன்பிறகு ஆகஸ்ட் 18 முதல் 22 வரை ஜிம்பாப்வேயில் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இதையடுத்து ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெறும் ஆசியக் கோப்பை டி20 போட்டியில் பங்கேற்கிறது. இப்போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. டி20 உலகக் கோப்பை அக்டோபர் 23 முதல் நவம்பர் 13 வரை நடைபெறுகிறது. அதன்பிறகு நியூசிலாந்துக்குச் சென்று 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் இந்திய அணி விளையாடுகிறது. இவை தான் நவம்பர் வரையிலான இந்திய அணியின் அதிகாரபூர்வ கிரிக்கெட் தொடர்கள். 

இந்நிலையில் ஆசியக் கோப்பை டி20 போட்டிக்குப் பிறகு இந்தியாவில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க அணிகள் சுற்றுப்பயணம் செய்து வெள்ளைப் பந்து தொடர்களில் விளையாடவுள்ளன. 

செப்டம்பர் 20 முதல் 25 வரை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. மொஹலி, நாகபுரி, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது. அதன்பிறகு செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 11 வரை தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் இந்திய அணி விளையாடுகிறது. டி20 தொடர் திருவனந்தபுரம், குவாஹாட்டி, இந்தூர் ஆகிய நகரங்களிலும் ஒருநாள் தொடர் ராஞ்சி, லக்னெள, தில்லி ஆகிய நகரங்களிலும் நடைபெறுகிறது. 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்பு இந்திய டி20 அணி, உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்க ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுவிடும். இதனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் டி20  அணியில் இல்லாத வீரர்கள் பங்கேற்கவுள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com