நேற்று இல்லாத மாற்றம்: 5-வது டெஸ்டில் இடம்பெறாத ஏழு இங்கிலாந்து வீரர்கள்!

இந்த அணிக்கும் கடந்த முறை 4-வது டெஸ்டில் விளையாடிய இங்கிலாந்து அணிக்கும் தான் எத்தனை வித்தியாசம்!
நேற்று இல்லாத மாற்றம்: 5-வது டெஸ்டில் இடம்பெறாத ஏழு இங்கிலாந்து வீரர்கள்!

கடந்த வருடம் செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் நடைபெற்றது. இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது.

திட்டமிட்டபடி 5-வது டெஸ்ட் நடைபெறவில்லை.

5-வது டெஸ்ட், மான்செஸ்டரில் நடைபெறுவதாக இருந்தது. இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டார்கள். அடுத்தக்கட்டமாக இந்திய அணியின் ஜூனியர் பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் பார்மருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால் மைதானத்தில் களமிறங்க இந்திய வீரர்கள் தயக்கம் காட்டினார்கள். இதையடுத்து மான்செஸ்டரில் நடைபெறுவதாக இருந்த 5-வது டெஸ்ட் ரத்தானது. இந்த டெஸ்ட் தான் பிர்மிங்கமில் நாளை தொடங்கவுள்ளது. 

5-வது டெஸ்டுக்கான இங்கிலாந்து X1 இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), அலெக்ஸ் லீஸ், ஸாக் கிராவ்லி, போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, சாம் பில்லிங்ஸ், மேத்யூ பாட்ஸ், ஸ்டூவர்ட் பிராட், ஜேக் லீச், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளார்கள்.

இந்த அணிக்கும் கடந்த முறை 4-வது டெஸ்டில் விளையாடிய இங்கிலாந்து அணிக்கும் தான் எத்தனை வித்தியாசம்!

4-வது டெஸ்டில் ஜோ ரூட் கேப்டனாக இருந்தார். இந்தமுறை அவர் வீரர் மட்டும் தான். புதிய கேப்டன், கடந்தமுறை விளையாடாத பென் ஸ்டோக்ஸ். புதிய பயிற்சியாளரும் (மெக்கல்லம்) அணியில் உள்ளார்.

4-வது டெஸ்டில் விளையாடிய 4 பேர் மட்டுமே 5-வது டெஸ்டில் இடம்பெற்றுள்ளார்கள். ஜோ ரூட், போப், பேர்ஸ்டோ, ஆண்டர்சன். 4-வது டெஸ்டில் விளையாடிய 7 பேர் 5-வது டெஸ்டில் இல்லை!

பர்ன்ஸ், ஹமீது, மலான், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், கிரைக் ஓவர்டன், ஆலி ராபின்சன் ஆகிய 7 வீரர்களும் 5-வது டெஸ்டில் விளையாடவில்லை. அந்தளவுக்கு இங்கிலாந்து அணியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

4-வது டெஸ்டில் இடம்பெறாத ஸாக் கிராவ்லி, அலெக்ஸ் லீஸ், பென் ஸ்டோக்ஸ், சாம் பில்லிங்ஸ், மேத்யூ பாட்ஸ், ஸ்டூவர்ட் பிராட், ஜேக் லீச் ஆகியோர் 5-வது டெஸ்டில் இடம்பெற்றுள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com