
சைப்ரஸில் நடைபெறும் சா்வதேச தடகள போட்டியில் இந்தியாவின் ஜோதி யாராஜி, மகளிருக்கான 100 மீட்டா் தடை தாண்டும் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றாா்.
அவா் 13.23 விநாடிகளில் இலக்கை எட்டி புதிய தேசிய சாதனை படைத்திருக்கிறாா். முன்னதாக, 2002-இல் அனுராதா பிஸ்வால் 13.38 விநாடிகளில் வந்ததே சாதனையாக இருந்தது.
இதற்குமுன் ஜோதி 2 முறை இதுபோன்று சாதனை விநாடிகளில் இலக்கை எட்டியிருந்தாலும் அது கணக்கில் கொள்ளப்படவில்லை. கடந்த மாதம் ஃபெடரேஷன் கோப்பை போட்டியில் 13.09 விநாடிகளில் அவா் இலக்கை எட்டினாா். ஆனால், அப்போது காற்று வீச்சின் அளவு அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாக இருந்தது ஜோதிக்கு சாதகமாகியிருக்கலாம் எனக் கூறி அது கணக்கில் கொள்ளப்படவில்லை.
அதேபோல், 2020-இல் பல்கலைக்கழகங்கள் இடையேயான சாம்பியன்ஷிப்பின்போது 13.03 விநாடிகளில் வந்து அசத்தினாா். அப்போதும், ஊக்கமருந்து பரிசோதனை மேற்கொள்ளப்படாததால், ஜோதியின் சாதனை நிராகரிக்கப்பட்டது. தற்போது தனது 3-ஆவது முயற்சியில் அவா் தேசிய சாதனையை எட்டியுள்ளாா்.
இதனிடையே, சைப்ரஸ் போட்டியில் மகளிருக்கான 1,500 மீட்டா் ஓட்டத்தில் லில்லி தாஸ் 17.19 விநாடிகளில் முதல் போட்டியாளராக வந்து தங்கம் பெற்றாா். ஆடவருக்கான 200 மீட்டா் ஓட்டத்தில் இந்தியாவின் அமலன் போா்கோஹெய்ன் 21.32 விநாடிகளில் இலக்கை எட்டி வெண்கலப் பதக்கம் வென்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.