தாமஸ் கோப்பை: வரலாறு படைத்தது இந்தியா!

தாமஸ் கோப்பை பாட்மின்டன் போட்டியின் 73 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக இந்தியா சாம்பியன் ஆகியிருக்கிறது. 
தாமஸ் கோப்பை: வரலாறு படைத்தது இந்தியா!

தாமஸ் கோப்பை பாட்மின்டன் போட்டியின் 73 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக இந்தியா சாம்பியன் ஆகியிருக்கிறது. 

தாய்லாந்தில் நடைபெற்று வந்த இப்போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியா 3-0 என்ற கணக்கில், 14 முறை சாம்பியனான இந்தோனேசியாவை வீழ்த்தி வாகை சூடி வரலாறு படைத்திருக்கிறது. 

இந்திய அணி, கடந்த 1979-க்குப் பிறகு இப்போட்டியில் அரையிறுதி, இறுதி ஆட்டங்களுக்கு முன்னேறியதும் இதுவே முதல் முறையாகும். இந்த முன்னேற்றத்தின்போது முக்கிய அணிகளான மலேசியா, டென்மார்க்கை இந்திய அணி சாய்த்தது குறிப்பிடத்தக்கது. 

இறுதி ஆட்டத்தில் முதலில் நடைபெற்ற ஒற்றையர் பிரிவில், உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற லக்ஷயா சென் 8-21, 21-17, 21-16 என்ற கேம்களில், உலகின் 5-ஆம் நிலை வீரரான அந்தோனி சினிசுகா கிங்டிங்கை 1 மணி 5 நிமிஷங்களில் தோற்கடித்து இந்தியாவுக்கு முன்னிலை அளித்தார். 

பின்னர் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் சிறந்த ஜோடியான சாத்விக்சாய்ராஜ்/சிரக் ஷெட்டி இணை 18-21, 23-21, 21-19 என்ற கேம்களில் முகமது ஆசன்/கெவின் சஞ்சயா சுகாமுல்ஜோ கூட்டணியை 1 மணி 13 நிமிஷங்களில் சரித்து, அணியின் முன்னிலையை மேலும் உறுதியாக்கியது. 

அடுத்து நடைபெற்ற 2-ஆவது ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் அனுபவமிக்க வீரரான கே.ஸ்ரீகாந்த் 21-15, 23-21 என்ற கேம்களில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றவரான ஜோனதன் கிறிஸ்டியை 48 நிமிஷங்களில் சாய்த்து இறுதி ஆட்டத்தில் அணியின் வெற்றியை உறுதி செய்தார். மொத்தம் 5 ஆட்டங்கள் நடைபெறும் நிலையில், முதல் மூன்றிலும் முன்னிலை பெற்று இந்தியா வெற்றியை உறுதி செய்ததால், எஞ்சிய இரு ஆட்டங்கள் நடைபெறவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com