உலக சாம்பியன் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற ஆஸ்திரேலியா!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் 2-0 என முன்னிலை பெற்று தொடரை வென்றுள்ளது ஆஸ்திரேலிய அணி.
உலக சாம்பியன் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற ஆஸ்திரேலியா!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் 2-0 என முன்னிலை பெற்று தொடரை வென்றுள்ளது ஆஸ்திரேலிய அணி.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் ஆட்டம் சிட்னியில் நடைபெற்றது. முதல் ஒருநாள் ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணி எளிதாக வென்றது.

ஆஸி. கேப்டன் பேட் கம்மின்ஸுக்கு ஓய்வு அளிக்கும்விதமாக இந்த ஆட்டத்தில் ஆஸி. அணியின் புதிய கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஹேஸில்வுட் களமிறங்கினார். அவர் இதற்கு முன்பு எந்தவொரு ஆட்டத்திலும் கேப்டனாக இருந்ததில்லை. அதேபோல இங்கிலாந்து அணியின் கேப்டனாக பட்லருக்குப் பதிலாக மொயீன் அலி செயல்பட்டார்.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. வார்னர் 16 ரன்களுக்கும் டிராவிஸ் ஹெட் 19 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு ஸ்மித்தும் லபுஷேனும் அருமையான கூட்டணி அமைத்தார்கள். 25 ஓவர்களுக்குப் பிறகு ஆடுகளம் ரிவர்ஸ் ஸ்விங்குக்கு ஏற்றவாறு மாறியது. ரன்கள் எடுக்க ஓரளவு சிரமம் ஏற்பட்டது. ஸ்மித் - லபுஷேன் கூட்டணி 112 பந்துகளில் 101 ரன்கள் எடுத்தார்கள். லபுஷேன் 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்பிறகு ஸ்மித் - மிட்செல் மார்ஷ் கூட்டணி 95 பந்துகளில் 90 ரன்கள் கூட்டணி அமைத்ததால் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்தது. சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்மித், 114 பந்துகளில் 94 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மிட்செல் மார்ஷ் 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இங்கிலாந்துத் தரப்பில் அடில் ரஷித் 3 விக்கெட்டுகளும் டேவிட் வில்லி, வோக்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.  

முதல் ஓவரிலேயே ஜேசன் ராய், டேவிட் மலான் ஆகியோரை டக் அவுட் செய்து அற்புதமான தொடக்கத்தை அளித்தார் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க். விரைவாக ரன்கள் எடுக்க முயன்ற பில் சால்ட், 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்பிறகு ஜேம்ஸ் வின்ஸ் - விக்கெட் கீப்பர் பேட்டர் சாம் பில்லிங்ஸ் ஜோடி நல்ல கூட்டணி அமைத்து 26 ஓவர்கள் வரை விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டார்கள். ஆனால் பில்லிங்ஸ் 71, வின்ஸ் 60 ரன்களுக்கு ஆட்டமிழந்த பிறகு இங்கிலாந்தின் தோல்வி உறுதியானது. கடைசியில் 38.5 ஓவர்களில் 208 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது இங்கிலாந்து அணி. ஸ்டார்க், ஸாம்பா ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 

உலக சாம்பியன் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் 2-0 என முன்னிலை பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது ஆஸ்திரேலிய அணி. 3-வது ஒருநாள் ஆட்டம் வரும் செவ்வாய் அன்று மெல்போர்னில் நடைபெறவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com