ஸ்ரேயாஸ், இஷான் அதிரடி: தென்னாப்பிரிக்காவை எளிதில் வீழ்த்திய இந்தியா

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஸ்ரேயாஸ், இஷான் அதிரடி:  தென்னாப்பிரிக்காவை எளிதில் வீழ்த்திய இந்தியா

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 2வது ஒரு நாள் போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து, முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அய்டன் மார்கரம் 79 ரன்கள் குவித்தார்.

இதனையடுத்து, 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது இந்திய அணி. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் ஷுப்மன் கில் களமிறங்கினர். தவான் 13 ரன்களிலும், ஷுப்மன் கில் 28 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனையடுத்து, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை தங்களது சிறப்பான ஆட்டத்தால் தென்னாப்பிரிக்க அணியின் பந்து வீச்சாளர்களுக்கு தலைவலியை கொடுத்தனர். 

இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவிக்க இந்தியாவின் வெற்றிக்குத் தேவையான ரன் குறைந்து கொண்டே வந்தது. சிறப்பாக விளையாடிய இஷான் கிஷன் 84 பந்துகளில் 93 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும். அதன்பின் சஞ்சு சாம்சன் களமிறங்கினார். ஸ்ரேயாஸ் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் இந்திய அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் சதமடித்து அசத்தினார். அவர் 111 பந்துகளில் 113 ரன்கள் குவித்தார். அதில் 15 பவுண்டரிகள் அடங்கும். சஞ்சு சாம்சன் 36 பந்துகளில் 30 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். 

இந்திய அணி 45.5 ஓவர்களில் இலக்கை அடைந்து தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நாளை மறுநாள் (அக்டோபர் 11) நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com