இந்தியாவுக்காக டி20 போட்டிகளில் விளையாடும் நம்பிக்கை உள்ளது: டி20 எதிர்காலம் குறித்து மனம் திறந்த ரோஹித் சர்மா!

இந்தியாவுக்காக டி20 போட்டிகளில் விளையாடும் நம்பிக்கை இன்னும் இருப்பதாகவும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் இந்திய அணியின்  ரோஹித் சர்மா தெரிவித்தார்.
இந்தியாவுக்காக டி20 போட்டிகளில் விளையாடும் நம்பிக்கை உள்ளது: டி20 எதிர்காலம் குறித்து மனம் திறந்த ரோஹித் சர்மா!

இந்தியாவுக்காக டி20 போட்டிகளில் விளையாடும் நம்பிக்கை இன்னும் இருப்பதாகவும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக  நடைபெற்ற உலகக் கோப்பை டி20 அரையிறுதி போட்டிக்குப் பிறகு இதுவரை ரோஹித் சர்மா ஒரு டி20 போட்டியில் கூட விளையாடவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான அந்தப் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வியை சந்தித்தது. அந்தத் தோல்வியின் மூலம் உலகக் கோப்பைக் கனவும் தகர்ந்தது. அதன்பின், இந்திய அணியை டி20 போட்டிகளில் ஹார்திக் பாண்டியா தற்போது வரை வழிநடத்தி வருகிறார். இதற்கிடையில், ஷுப்மன் கில், ராகுல் திரிபாதி, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், திலக் வர்மா, தீபக் ஹூடா ஆகிய இளம் வீரர்கள் பேட்டிங்கில் கலக்கி வருகிறார்கள். ரோஹித் சர்மாவைப் போலவே விராட் கோலியும் இங்கிலாந்துடன் ஏற்பட்ட அரையிறுதி தோல்விக்குப் பின் இன்னும் இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் விளையாடவில்லை. 

இந்த நிலையில், இந்தியாவுக்காக டி20 போட்டிகளில் விளையாடும் நம்பிக்கை இன்னும் இருப்பதாகவும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரோஹித் சர்மா பேசியிருப்பதாவது: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பையை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். இங்கு (அமெரிக்கா) வந்து செல்வது, மகிழ்ச்சியாக இருப்பது அதைத் தவிர்த்து இங்கு வருவதற்கு மற்றொரு முக்கியமான காரணம் இருக்கிறது. உங்களுக்கே தெரியும் டி20 உலகக் கோப்பை வரப்போகிறது. அடுத்த ஆண்டு  ஜுன் மாதத்தில் இங்கு உலகக் கோப்பை நடைபெற உள்ளது. அதை நினைத்து அனைவரும் உற்சாகமாக இருப்பார்கள் என்பதை என்னால் நிச்சயமாக கூற முடியும். நாங்களும் இந்த உலகக் கோப்பையை ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கிறோம் என்றார்.

இதுவரை இந்திய அணிக்காக 148 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 3,853 ரன்கள் குவித்துள்ளார். அதில் 4 சதங்கள் மற்றும் 29 அரைசதங்கள் அடங்கும். டி20 போட்டியில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 118 என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com