நீதிக்காகக் காத்திருக்கும் பதக்கங்கள்!

இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு எதிரான மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
நீதிக்காகக் காத்திருக்கும் பதக்கங்கள்!
Published on
Updated on
3 min read


மல்யுத்தம் போன்ற விளையாட்டுகள் நம் கவனத்துக்கு வருவதே இரண்டே காரணங்களுக்காகத்தான். ஒன்று ஒலிம்பிக்கில் எதாவது ஒரு பதக்கத்தைப் பெற்றிருக்க வேண்டும் அல்லது வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தலைச் சந்திருக்க வேண்டும். பல ஆண்டு பாலியல் ரீதியான பாதிப்புகளுக்குப் பின் இம்முறை மல்யுத்த வீராங்கனைகள் சாலைக்கு வந்திருக்கின்றனர். தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக கடுமையான குரலைப் பதிவு செய்தே ஆக வேண்டும் என்கிற வேட்கையுடன் சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்ட வீராங்கனைகள் பல மாதங்களாக போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததுடன் அவர்களைப் படுக்கைக்கு அழைப்பதாகக் கூறி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய வீராங்கனைகள், இப்பிரச்னையை பொது கவனத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உண்மையில் சம்மேளனத்தின் பேரில் பிரிஜ் பூஷண் என்ன செய்தார் என்பதைக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.

பிரிஜ் பூஷண் சிங்.
பிரிஜ் பூஷண் சிங்.

2011 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சிங், பல மல்யுத்த வீராங்கனைகளிடம் தவறான முறையில் நடந்து கொண்டதாகவே குரல்கள் எழுத் தொடங்கியிருக்கின்றன. கடந்த ஜனவரி மாதம் வீராங்கனை வினேஷ் போகத் குற்றம்சாட்டி இப்பிரச்னையை கவனத்திற்குக் கொண்டு வந்தார். தொடர்ந்து, தில்லியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினர். வீராங்கனைகளுக்கு ஆதரவாக மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா உள்ளிடோரும் இணைந்தனர். 

போராட்டத்தின் விளைவாக, பிரிஜ் பூஷண் பதவி விலகியதோடு மல்யுத்த சம்மேளனத்தின் புதிய தலைவருக்கான தேர்தலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதேபோல், கடந்த டிச.21 ஆம் தேதி இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

பிரிஜ் பூஷணின் ஆதரவாளரான சஞ்சய் சிங், தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சாக்‌ஷி மாலிக், கண்ணீருடன் மல்யுத்தத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சாக்‌ஷியின் கண்ணீரை விட அவரது காலணிகளை மேஜையில் வைத்த புகைப்படம் நிலை குலைய வைத்துவிட்டது.

தொடர்ந்து, பஜ்ரங் புனியா தன்  பத்ம ஸ்ரீ விருதை திருப்பியளித்தார்.  வினேஷ் போகத் அர்ஜுன, கேல் ரத்னா போன்ற உயரிய விருதுகளைத் திருப்பியளிப்பதாகக் கூறியுள்ளார். இதற்குப் பின்பே, பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்த மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் புதிய நிர்வாகிகளை இடைநீக்கம் செய்ததுடன் அமைச்சர் அனுராக்  சிங் தாகூர் இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.  அதில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்கவும், கட்டுப்படுத்தவும் தற்காலிக குழு அமைக்க வேண்டும் என்றும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பில் தொடர்ச்சியாக நடந்து வரும் சர்ச்சைகளுக்கு முடிவு காண வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.  இவ்வளவு குரல்களைக் கொடுத்த பின்பே மத்திய அரசு இறங்கி வந்திருக்கிறது என்கிற சூழலில் இதுவும் ஒரு ‘அரசியல்’ நாடகமாக இருந்து விடக்கூடாது என்பதே சாக்‌ஷி மாலிக் உள்ளிட்டோரின் பெரும் கவலையாக இருக்கிறது.

சாக்‌ஷி மாலிக் தரப்பில் நியாயமான கேள்விகளே வைக்கப்படுகின்றன. இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷண் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்ததும் ஏன் அவரைத் தலைவர் பதவிலிருந்து உடனே நீக்கவில்லை? அவர் நீக்கப்பட்டதும் சம்மேளனத்தின் புதிய தலைவராக பெண் ஒருவரை நியமிக்கக் கோரிக்கை வைத்திருந்தோம். ஆனால், பிரிஜ் பூஷணின் ஆதரவாளரான சஞ்சய் சிங்கை ஏன் தலைவராக கமிட்டி தேர்ந்தெடுத்தது? எதுவும் மாறாது என்பதைப் புரிந்துகொள்ளத்தான் இந்தப் போராட்டத்தை நடத்தினோமா? இந்தக் கேள்விகளுக்கு அரசிடம் பதில் இல்லாமலா இருக்கும்? நாட்டின் புகழை உலகளவில் கொண்டு செல்லும் விளையாட்டு வீரர்களின் பிரச்னையை பாஜக தலைமையிலான மத்திய அரசு ஏன் இவ்வளவு மோசமாகக் கையாள்கிறது என்பதே விளையாட்டு வீரர்களின் ஆதங்கமாக ஒலிக்கிறது.



கடந்த 8 ஆண்டுகளாக இந்தியாவில் விளையாட்டுத் துறை சிறப்பாக உள்ளதாகக் கூறும் பிரதமர் நரேந்திரமோடி விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை அறிந்திருப்பாரா என்பது தெரியவில்லை. இந்தியர்கள் ஒலிம்பிக்கில் பதக்கங்களைப் பெற்றவுடன் தன் வாழ்த்துகளை அடுத்த நொடியில் பதிவிட முடிகிற ஒரு பிரதமரால், அதே வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறினால் ஒரு ஆறுதலைக் கூட அளிக்க முடியவில்லை. பெண்களின் பாதுகாப்புக் குறித்து கவலைப்படுகிற இந்த நாட்டில் வலிமையின் குறியீடாகக் கருதப்படும் மல்யுத்தம் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடும் பெண்களுக்கே இங்கு பாதுகாப்பு இல்லை என்கிற உண்மையை அமைதியால் மறைக்க முடியுமா?

1960 ஆம் ஆண்டு ரோம் ஒலிம்பிக்கில் அமெரிக்க சார்பாக குத்துச்சண்டைப் போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கத்தைப் பெறும் முகமது அலி, மகிழ்ச்சியாக தன் சொந்த ஊருக்குத் திரும்புகிறார். அங்கு, தன் ஒலிம்பிக் பதக்கத்தை அணிந்தவாறே பிரபல உணவகத்துக்குள் நுழைகிறார். ஆனால், நிறவெறியுடன் இருந்த உணவக நிர்வாகம்  கருப்பினர்கள் அமர்ந்து உண்ண அனுமதியில்லை என முகமது அலியை அவமானப்படுத்துகின்றனர். மன உளைச்சலுக்கு ஆளான அலி, தன் நிறத்திற்காக தனக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கடக்க முடியாமல் பக்கத்திலிருந்த ஓஹியோ ஆற்றில் தன் பதக்கத்தை தூக்கி வீசுகிறார். அடுத்த 7 ஆண்டுகள் கழித்து குத்துச்சண்டை வீரர் எர்னி டெர்ரல், முகமது அலியின் இயற்பெயரான கிளாசிஸ் கிளே பெயரைக் குறிப்பிட்டு பொதுவெளியில் அலியை அவமானப்படுத்துகிறார். கிளாசிஸ் கிளே என்பது கறுப்பின அடிமைப் பெயர். ஆத்திரமடைந்த முகமது அலி, ஒரு சில சுற்றுகளில் முடிந்திருக்க வேண்டிய ஆட்டத்தை 15 சுற்றுகள் வரை கொண்டு சென்று எர்னியின் முகத்தை கோரமாக்கி, ‘சொல். என் பெயர் என்ன’? (say. whats my name) எனக் கேட்கிறார். வலியைத் தாங்கமுடியாத எர்னி ஒருகட்டத்தில், ‘முகமது அலி’ என்றதும் அலி  அடிப்பதை நிறுத்துகிறார்.

தன் திறமையை நம்பி விளையாட்டுத் துறைக்குள் வரும் வீரர்கள் அதிகாரத்தை எத்தனை வகைகளில் எதிர்க்க வேண்டியிருக்கிறது? முகமது அலி ஓஹியோ ஆற்றில் தன் தங்கப்பதக்கத்தை வீசியதுபோல் இந்திய மல்யுத்த வீராங்கனைகள் கூட்டமாக கங்கையில் தங்களின் பதக்கங்களைத் தூக்கியெறிய வந்த சம்பவமும் அதே அதிகாரத்துக்கு எதிரான வெளிப்பாடுதானே? இன்று அமெரிக்காவில் கறுப்பினத்தவர் ஒருவர் நிறவெறி வன்முறைக்காக பதக்கத்தைத் தூக்கி ஆற்றில் எறிவதை நம்மால் கற்பனைக் கூட செய்யமுடியாது. இப்படியான சம்பவம் பொதுவெளிக்கு வருவது அந்நாட்டின் மாண்பைப் குறைப்பதற்கு சமம்.

ஆனால், உலக நாடுகளிடம் நாங்கள் வளர்ந்துவிட்டோம் எனக் கூறும் மத்திய அரசு, எல்லாவிதத்திலுமா? என்கிற கேள்வியை ஈவு இறக்கமின்றி கேட்கும் நிலையில்தான் இன்றும் இருக்கிறது என்பதை இந்திய மல்யுத்த வீராங்கனைகள் உணர்த்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பிரச்னையில் அரசு தீவிரமாகத் தலையிடாவிட்டால், நீதிக்காக கங்கையில் இன்னும் பலநூறு பதக்கங்கள் மிதக்கக் காத்திருப்பதை நாம் வேடிக்கை பார்க்க வேண்டும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.