இந்திய அணி திணறல்: முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா!

37-வது ஓவரின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து முன்னிலை பெற்றுள்ளது.
லபுஷேன்
லபுஷேன்

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்தூரில் நடைபெறும் டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் கே.எல். ராகுல், ஷமிக்குப் பதிலாக ஷுப்மன் கில், உமேஷ் யாதவ் ஆகியோரும் ஆஸி. அணியில் கம்மின்ஸ், வார்னருக்குப் பதிலாக மிட்செல் ஸ்டார்க், கிரீன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளார்கள். 

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 109 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பில் இந்திய அணியின் ஸ்கோரைத் தாண்டிச் சென்று முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றுள்ளது. ஹெட் 9 ரன்களிலும் லபுஷேன் 31 ரன்களிலும் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்கள். 37-வது ஓவரின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து முன்னிலை பெற்றுள்ளது. கவாஜா 54 ரன்களுடனும் ஸ்மித் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளார்கள்.

ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் குறைந்தது 150 ரன்களாவது முன்னிலை பெற்று இந்திய அணிக்கு நெருக்கடி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்திய அணியின் இன்னிங்ஸில் முதல் ஓவரிலேயே ரோஹித் சர்மா இருமுறை அவுட் ஆக வாய்ப்பிருந்த போதும் நடுவரின் தவறால் தப்பிப் பிழைத்தார். ஆஸி. அணியும் டிஆர்எஸ்ஸைப் பயன்படுத்தாததால் நல்ல வாய்ப்பை இழந்தது. எனினும் தலா 3 பவுண்டரிகளில் அடித்து 12 ரன்களில் ரோஹித் சர்மாவும் 21 ரன்களிலும் ஷுப்மன் கில்லும் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு வரிசையாக விக்கெட்டுகள் விழ ஆரம்பித்தன. கோலி மட்டும் அதிகபட்சமாக 52 பந்துகளை எதிர்கொண்டு 22 ரன்கள் எடுத்து மர்ஃபி பந்தில் ஆட்டமிழந்தார். புஜாரா 1 ரன், ஜடேஜா 4 ரன்கள், ஷ்ரேயஸ் ஐயர் டக் அவுட், பரத் 17 ரன்கள் என இதர பேட்டர்களும் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தார்கள்.  

இந்திய அணி முதல் நாள் மதிய உணவு இடைவேளையின்போது 26 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்தது. 6 ரன்களுடன் அக்‌ஷர் படேலும் 1 ரன்னுடன் அஸ்வினும் களத்தில் இருந்தார்கள்.  

இதற்குப் பிறகு இந்திய அணியின் மீதமுள்ள மூன்று விக்கெட்டுகளும் வீழ்ந்தன. அஸ்வின் 3 ரன்கள், உமேஷ் யாதவ் 17 ரன்களும் எடுத்தார்கள். சிராஜ் டக் அவுட் ஆனார். உமேஷ் யாதவ் 13 பந்துகளை எதிர்கொண்டு 2 சிக்ஸர்களும் 1 பவுண்டரியும் அடித்து ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தார்.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 33.2 ஓவர்களில் 109 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. மேத்யூ குனேமன் 5 விக்கெட்டுகளும் லயன் 3 விக்கெட்டுகளும் மர்ஃபி 1 விக்கெட்டும் எடுத்தார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com