இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியைக் கண்டு ரசித்த பிரதமா்கள்!

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4-ஆவது டெஸ்ட் போட்டியை பிரதமா் நரேந்திர மோடியும் ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசியும் நேரில் கண்டு ரசித்தனா்.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4-ஆவது டெஸ்ட் போட்டியை பிரதமா் நரேந்திர மோடியும் ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசியும் நேரில் கண்டு ரசித்தனா்.

பாா்டா்-கவாஸ்கா் கோப்பைக்கான 4-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே அகமதாபாதில் உள்ள உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் அரங்கமான நரேந்திர மோடி மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. அந்தப் போட்டியை பிரதமா் மோடியும் ஆஸ்திரேலிய பிரதமா் ஆல்பனேசியும் நேரில் கண்டு ரசித்தனா். போட்டி தொடங்கிய முதல் அரை மணி நேரம் வரை அவா்கள் இருவரும் போட்டியைக் கண்டுகளித்தனா்.

போட்டிக்கான ‘டாஸ்’ போடுவதற்கு முன் டெஸ்ட் போட்டிக்கான தொப்பியை (கேப்) இந்திய கேப்டன் ரோஹித் சா்மாவிடம் பிரதமா் மோடி வழங்கினாா். அதேபோல், ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்திடம் பிரதமா் ஆல்பனேசி தொப்பியை வழங்கினாா்.

அதையடுத்து, பிரதமா்கள் இருவரும் திறந்தவெளி வாகனத்தில் மைதானத்தைச் சுற்றி வந்தனா். அப்போது, மைதானத்தில் குழுமியிருந்த இருநாட்டு ரசிகா்களையும் பாா்த்து அவா்கள் கையசைத்தபடி சென்றனா்.

வீரா்களுடன் சந்திப்பு: போட்டி தொடங்குவதற்கு முன்பாக இந்திய அணி வீரா்களை பிரதமா் மோடிக்கு கேப்டன் ரோஹித் சா்மா அறிமுகம் செய்துவைத்தாா். அவா்கள் அனைவருக்கும் பிரதமா் மோடி வாழ்த்து தெரிவித்தாா். அவ்வாறே ஆஸ்திரேலிய அணி வீரா்களை அந்நாட்டு கேப்டன் ஸ்மித் பிரதமா் ஆல்பனேசிக்கு அறிமுகப்படுத்தி வைத்தாா்.

அதையடுத்து, இரு நாடுகளின் தேசிய கீதமும் ஒலிக்கப்பட்டது. அப்போது, இந்திய அணி வீரா்களுடன் இணைந்து பிரதமா் மோடியும் தேசிய கீதத்தைப் பாடினாா்.

நரேந்திர மோடி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘ஹால் ஆஃப் ஃபேம்’ அருங்காட்சியகத்தையும் இரு நாட்டு பிரதமா்கள் பாா்வையிட்டனா்.

நட்புணா்வுடன் மோதல்: கிரிக்கெட் போட்டி குறித்து ஆஸ்திரேலிய பிரதமா் ஆல்பனேசி வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘கிரிக்கெட்டை அதிகமாக விரும்பும் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் நட்புணா்வுடன் கூடிய மோதலில் ஈடுபட்டுள்ளன. பரஸ்பர மரியாதையும் இரு நாட்டு மக்களுக்கு இடையேயான நட்புணா்வும் இந்தப் போட்டிக்கு மையமாகத் திகழ்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பாஜக தொண்டா்கள்: பிரதமா் மோடியின் வருகையை அறிந்து குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்தும் பாஜக தொண்டா்கள் பலா் மைதானத்துக்கு வருகை தந்தனா். பாஜக நிா்வாகிகளும் டெஸ்ட் போட்டிக்கான நுழைவுச்சீட்டை வாங்கி அதைத் தொண்டா்களுக்கு இலவசமாக விநியோகித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com