
உலகக் கோப்பையை வெல்வதற்கு ஹார்திக் பாண்டியாவின் ஃபார்ம் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
ரோஹித் சர்மா தலைமையிலான உலகக் கோப்பைக்கான இந்திய அணி இன்று (செப்டம்பர் 5) அறிவிக்கப்பட்டது. ஹார்திக் பாண்டியா துணைக் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். டி20 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி வரும் ஹார்திக் பாண்டியா அண்மையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது மற்றும் 3-வது ஒருநாள் போட்டிகளின்போது கேப்டனாக இந்திய அணியை வழிநடத்தினார். தற்போது உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் துணைக் கேப்டனாக பாண்டியா அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், உலகக் கோப்பையை வெல்வதற்கு ஹார்திக் பாண்டியாவின் ஃபார்ம் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: ஹார்திக் பாண்டியாவின் ஃபார்ம் இந்திய அணிக்கு மிகவும் முக்கியம். அவர் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படக் கூடியவர். அது முக்கியமானது. அவர் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது. அவரது அந்த ஆட்டம் தரமானதாக இருந்தது. இஷான் மற்றும் ஹார்திக்கின் சிறப்பான ஆட்டத்தால் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் ஸ்கோர் உயர்ந்தது. பாண்டியா பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்படுகிறார். கடந்த ஆண்டும் அவர் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தினார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பொறுப்புகளை தனது தோளில் சுமந்து அவர் விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது. இதெல்லாம் இந்திய அணிக்கு சாதகமான விஷயங்கள் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.