
சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து உலகத் தரவரிசையில் இந்திய மகளிர் ஹாக்கி அணி 6-ம் இடம் பிடித்துள்ளது.
இந்திய அணி இப்போது 83 தரவரிசைப் புள்ளிகளுடன், இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி ஆறாவது இடத்தில் உள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்பு இந்திய மகளிர் அணி 8-வது இடத்தில் இருந்தனர். ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் பட்டம் வென்றது மட்டுமின்றி இறுதிவரை எந்த ஆட்டத்திலும் தோற்கடிக்கப்படாமல் இருந்தது ஆகியவற்றைத் தொடர்ந்து தரவரிசைப் பட்டியலில் முன்னேறி உள்ளனர்.
தரவரிசைப் பட்டியலில் நெதர்லாந்து அணி உலகின் சிறந்த மகளிர் ஹாக்கி அணியாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா இரண்டாம் இடத்திலும், அர்ஜெண்டினா அணி மூன்றாவது இடத்திலும் உள்ளன.
அவற்றைத் தொடர்ந்து பெல்ஜியம் அணி நான்காம் இடத்திலும், ஜெர்மனி மகளிர் ஹாக்கி அணி ஐந்தாம் இடத்திலும் உள்ளன.
ஜார்க்கண்டின் ராஞ்சியில் ஜனவரி 13 முதல் 19 வரை நடைபெறவிருக்கும் எஃப்.ஐ.எச் ஹாக்கி ஒலிம்பிக் தகுதிச் சுற்றிலும் இதேபோல சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் தரவரிசைப் பட்டியலில் மேலும் முன்னேற வாய்ப்புள்ளது.
அடுத்த ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் முயற்சியில் ஜெர்மனி, நியூசிலாந்து, ஜப்பான், சிலி, அமெரிக்கா, இத்தாலி மற்றும் செக் குடியரசு ஆகிய அணிகளுக்கு இந்திய மகளிர் ஹாக்கி அணி வீராங்கனைகள் போராட உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.