உருகுவே நாட்டைச் சேர்ந்த 27 வயதான கால்பந்து வீரர் ஜுவான் இப்கியர்தோ கடந்த ஆக.22ஆம் தேதி மைதானத்தில் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
ஜுவான் இப்கியர்தோ 1997இல் உருகுவே நாட்டில் பிறந்தவர். அந்நாட்டிற்காக கால்பந்தில் டிபெண்டராக விளையாடி வந்தார். மொத்தம் 115 போட்டிகளில் (கிளப் போட்டிகள் உள்பட) விளையாடியுள்ளார். அதில் 7 கோல்களும் அடித்துள்ளார்.
ஆக.22ஆம் தேதி கோபா லிபர்டாடோர்ஸ் போட்டியின் 84ஆவது நிமிடத்தில் யாருடனும் மோதாமல் அவராகவே தானாக மயங்கி விழுந்தார்.
பின்னர் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட இவர் 5 நாள்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனை நேஷ்னல் ( ஸ்பேனிஷில் நசியுனல்) கால்பந்து அணி தனது அதிகாரபூர்வ எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளது. அதில் அந்த அணி கூறியதாவது:
”நமது கிளப்பினைச் சேர்ந்த ஜுவான் இப்கியர்தோ மரணமடைந்ததை மிகுந்த வருத்தத்துடனும் அதிர்ச்சியுடனும் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது குடும்பம், நண்பர்கள், அணியின் சக வீரர்களுக்கும் அவருக்கு பிரியமானவர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஈடுசெய்ய முடியாத இழப்புக்கு நேஷ்னல் அணி துயருறுகிறது” எனப் பதிவிட்டுள்ளது.
இந்த துயரத்தினை முன்னிட்டு உருகுவேவின் முதல் தர, இரண்டாம் தர கால்பந்தாட்ட போட்டிகளை வார இறுதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
பிரேசிலின் கால்பந்தாட்ட ஊடக பிரிவின் தலைவர் சௌ பாலோ , “கால்பந்தாட்டத்தின் சோகமான நாள்” எனக் கூறியுள்ளார்.