தந்தை முன்பு இந்தியாவுக்காக விளையாடுவதே லட்சியம்: மனம் திறந்த சர்ஃபராஸ் கான்!
தனது தந்தையின் முன் சர்வதேசப் போட்டியில் விளையாட வேண்டும் என்பதே கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கிய நாள் முதல் தனது கனவாக இருந்ததாக சர்ஃபராஸ் கான் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று (பிப்ரவரி 15) ராஜ்கோட்டில் தொடங்கியது. இந்தப் போட்டியில் சர்ஃபராஸ் கான் அறிமுக வீரராக களமிறங்கினார். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்ஃபராஸ் 66 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
இந்த நிலையில், தனது தந்தையின் முன் சர்வதேசப் போட்டியில் விளையாட வேண்டும் என்பதே கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கிய நாள் முதல் தனது கனவாக இருந்ததாக சர்ஃபராஸ் கான் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக சர்ஃபராஸ் கான் பேசியதாவது: மைதானத்தில் முதல் முறையாக எனது தந்தையின் முன்பு இந்திய கிரிக்கெட் அணிக்கான தொப்பியை வாங்கினேன். எனது 6 வயதில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினேன். எனது தந்தையின் முன்பு இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதே கனவாக இருந்தது. 4 மணி நேரமாக நான் பேட்டிங் செய்வதற்கு தயாராக இருந்தேன். இத்தனை ஆண்டுகளாக இந்திய அணியில் விளையாடுவதற்காக அமைதியாக காத்திருந்தோம். இன்னும் சிறிது காத்திருப்பதில் எந்த ஒரு தீங்கும் ஏற்பட்டுவிடாது எனக் கூறிக்கொண்டேன்.
களமிறங்கியவுடன் முதலில் பந்துகளை சந்திக்கும்போது பதற்றமாக உணர்ந்தேன். இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பது எனது அப்பாவின் கனவு. ஆனால், சில காரணங்களால் அவரது ஆசை நிறைவேறவில்லை. எனக்காவும், எனது சகோதரனுக்காவும் அவர் நிறைய கடினமாக உழைத்துள்ளார். இது எனது வாழ்க்கையின் மிகவும் பெருமையான தருணம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.