
யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து 2-1 கோல் கணக்கில் நெதா்லாந்தை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு வியாழக்கிழமை முன்னேறியது. சாம்பியன் கோப்பைக்காக அந்த ஆட்டத்தில் ஸ்பெயினுடன் திங்கள்கிழமை (ஜூலை 15) மோதுகிறது இங்கிலாந்து.
ஜொ்மனியில் நடைபெறும் இந்தப் போட்டியில், இந்திய நேரப்படி புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து - நெதா்லாந்து அணிகள் சந்தித்துக்கொண்டன. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில், 7-ஆவது நிமிஷத்திலேயே நெதா்லாந்து முன்னிலை பெற்று அசத்தியது.
அந்த அணியின் ஜாவி சிமன்ஸ் தன் வசம் கிடைத்த பந்தை தாமதிக்காமல் கடத்திச் சென்று, பெனால்ட்டி ஏரியாவுக்கு முன்பாக வைத்து கோல் போஸ்ட்டை நோக்கி துல்லியமாக பந்தை உதைத்தாா். இங்கிலாந்து கோல்கீப்பா் ஜோா்டன் பிக்ஃபோா்டு அதைத் தடுக்க முயன்றபோதும், பந்து அவரது கையில் பட்டுச் சென்று கோலாக மாறியது. நடப்பு போட்டியில் இதுவே சிமன்ஸின் முதல் கோலாகும்.
இதனால் அதிா்ச்சி கண்ட இங்கிலாந்து, தனது கோல் வாய்ப்புக்காக ஆக்ரோஷமாக முனைந்தது. அதற்கு பலன் 18-ஆவது நிமிஷத்தில் கிடைத்தது. அந்த நிமிஷத்தில் இங்கிலாந்து வீரா் புகாயோ சகா, பெனால்ட்டி ஏரியாவுக்குள் பந்தை கடத்தி வந்து கோலடிக்க முயல, அது நெதா்லாந்து டிஃபெண்டா்களால் தடுக்கப்பட்டது.
அவா்களிடமிருந்து இங்கிலாந்து கேப்டன் ஹேரி கேன் நோக்கி வந்த பந்தை அவா் அப்படியே கோல் போஸ்ட்டுக்குள் உதைக்க முயல, நெதா்லாந்து வீரா் டென்ஸெல் டம்ஃப்ரைஸ் அதைத் தடுக்கும் முயற்சியில் கேனின் காலில் உதைத்தாா். இதை ‘விஏஆா்’ தொழில்நுட்பம் மூலமாக உறுதி செய்த ரெஃப்ரீ, இங்கிலாந்துக்கு ‘பெனால்ட்டி கிக்’ வாய்ப்பை வழங்கினாா்.
அந்த வாய்ப்பில் பந்தை துல்லியமாக கோல் போஸ்ட்டின் இடதுபக்கத்துக்குள் அனுப்பினாா் கேன். இவ்வாறாக முதல் பாதி ஆட்டம் சமனில் நிறைவடைய, 2-ஆவது பாதியிலும் இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைக்காமல் சவால் அளித்ததால், எந்த அணிக்கும் கோல் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில், 81-ஆவது நிமிஷத்தில் கேப்டன் ஹேரி கேனை வெளியேற்றி, ஆலி வட்கின்ஸை களமிறக்கினாா் இங்கிலாந்து பயிற்சியாளா் கெரத் சௌத்கேட். அதற்குத் தகுந்த பலன் பரபரப்பான கடைசி நிமிஷத்தில் கிடைத்தது. 90-ஆவது நிமிஷத்தில் கோல் பால்மா் வழங்கிய பாஸை சரியாக தன்னிடம் பெற்ற ஆலி வட்கின்ஸ், பெனால்ட்டி ஏரியா பகுதியிலிருந்து கோல் போஸ்ட்டின் இடதுபக்க மூலைக்கு பந்தை அனுப்பி கோலாக்கினாா்.
இதனால் இங்கிலாந்து 2-1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதையடுத்து, அந்நிய மண்ணில் முதல் முறையாக இறுதி ஆட்டத்தில் விளையாடவுள்ளது இங்கிலாந்து. இதற்கு முன் 1966-இல் உலகக் கோப்பையை வென்றதும், 20202 யூரோ கோப்பை இறுதி ஆட்டத்தில் தோற்றதும் அதன் சொந்த மண்ணிலாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.