
இந்தாண்டு விளையாட்டு ரசிகர்களுக்கு சிறப்பான ஆண்டாக இருந்தாலும் வரும் ஞாயிறு (ஜூலை 14) மிகச் சிறந்த ஞாயிற்றுக் கிழமையாக அமையவிருக்கிறது. ஏனெனில் யூரோ கால்பந்து இறுதிப் போட்டி, கோபா கால்பந்து இறுதிப் போட்டி, விம்பிள்டன் (டென்னிஸ்) ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டி, இந்தியா ஜிம்பாப்வே டி20 (கடைசி போட்டி) என அனைத்தும் ஒரே நாளில் அமைகின்றன.
யூரோ கால்பந்து: இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணி
யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டியில் ஸ்பெயினுடன் இங்கிலாந்து மோதுகிறது.
யூரோ கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு இங்கிலாந்து தகுதிபெற்றது இதுவே முதல் முறை. ஸ்பெயின் இதுவரை 3 முறை யூரோ கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோபா அமெரிக்கா கால்பந்து: இந்திய நேரப்படி காலை 5.30 மணி
கால் பந்து ரசிகர்களுக்குதான் இதில் சிறப்பான ஞாயிறு. கோபா கால்பந்து கோப்பையின் இறுதிப்போட்டியில் கொலம்பிய அணி ஆா்ஜென்டீனாவுடன் மோதுகிறது.
கொலம்பிய அணி ஒரேமுறை மட்டுமே கோபா அமெரிக்கா கோப்பையை வென்றுள்ளது. மாறாக ஆா்ஜென்டீனா 15 முறை கோப்பையை வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இறுதிப் போட்டி ஜூலை 15 காலை 5.30 ( இந்திய நேரப்படி திங்கள் அதிகாலை 5.30மணிக்கு ) நடைபெற உள்ளது.
கிரிக்கெட்: இந்திய நேரப்படி மாலை 4.30 மணி
கிரிக்கெட் ரசிகர்களுக்கு தற்போதுதான் டி20 உலகக் கோப்பை முடிந்தது. இந்தியா ஜிம்பாப்வே மோதும் 4ஆவது டி20 இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. இறுதிப் போட்டி நாளை நடைபெறும்.
விம்பிள்டன் இறுதிப்போட்டி: இந்திய நேரப்படி மாலை 6.30 மணி
இந்தாண்டின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், நட்சத்திர வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் 10ஆவது முறையாக இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளார்.
இறுதிப் போட்டியில் மீண்டும் அல்கராஸ் உடன் மோதுகிறார் ஜோகோவிச். கடந்தாண்டு விம்பிள்டனில் அல்கராஸ் ஜோகோவிசை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதற்கு ஜோகோவிச் பழிதீர்ப்பாரா என அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
பல வருடங்களுக்குப் பிறகு இப்படியான ஒரு ஞாயிற்றுக்கிழமை (சூப்பர் சன்டே) விளையாட்டு ரசிகர்களுக்கு அமைந்திருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.