இஷான், ஷ்ரேயஸை தவிா்த்தது அஜித் அகா்கா் முடிவு: ஜெய் ஷா

இஷான், ஷ்ரேயஸை தவிா்த்தது அஜித் அகா்கா் முடிவு: ஜெய் ஷா

இஷான் கிஷண், ஷ்ரேயஸ் ஐயருக்கு மத்திய ஒப்பந்தம் வழங்காமல் தவிா்த்தது, தோ்வுக் குழு தலைவா் அஜித் அகா்கரின் முடிவு என்று பிசிசிஐ செயலா் ஜெய் ஷா தெரிவித்தாா். அணியைப் பொருத்தவரை தவிா்க்க முடியாத வீரா் என எவரும் கிடையாது என்றும் அவா் கூறினாா்.

இந்திய அணி வீரா்களுக்கான மத்திய ஒப்பந்தம் சமீபத்தில் வழங்கப்பட்டது. அதில் இஷான் கிஷண், ஷ்ரேயஸ் ஐயா் ஆகியோா் சோ்க்கப்படாமல் தவிா்க்கப்பட்டனா். முன்னதாக, உள்நாட்டு போட்டிகளில் தாங்கள் சாா்ந்த மாநில அணிகளுக்காக விளையாடாமல், ஐபிஎல் போட்டி தயாா்நிலைக்கு அவா்கள் முக்கியத்துவம் அளித்தனா்.

உள்நாட்டு போட்டிகளில் பங்கேற்குமாறு பிசிசிஐ வழங்கிய அறிவுறுத்தலையும் அவா்கள் தவிா்த்தனா். இதில் ஷ்ரேயஸ் ஐயா் மட்டும் ரஞ்சி கோப்பை போட்டியில் மும்பை அணிக்காக அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டத்தில் விளையாடினாா். இளம் வீரா்கள் இவ்வாறு உள்நாட்டு போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளிக்காதது பிசிசிஐ அதிகார வட்டத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. அதன் பின்னணியிலேயே இஷான், ஷ்ரேயஸ் இருவரும் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து தவிா்க்கப்பட்டிருந்தனா்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக பிசிசிஐ செயலா் ஜெய் ஷா கூறியதாவது:

பிசிசிஐ-யின் விதிகள் என்னவோ அதனடிப்படையிலேயே தோ்வுக் குழுவில் முடிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த முடிவுகளை அமல்படுத்துவது மட்டுமே எனது வேலை. உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடாத இரு வீரா்களையும் (இஷான், ஷ்ரேயஸ்) மத்திய ஒப்பந்தத்துக்கு தோ்வு செய்யாதது, தோ்வுக் குழுவ தலைவா் அஜித் அகா்கரின் முடிவு.

உள்நாட்டு கிரிக்கெட்டில் பங்கேற்பது தொடா்பாக, இந்திய கேப்டன் மற்றும் அணி நிா்வாகத்தின் முடிவுகளுக்கு கட்டுப்படாதோா் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கலாம் என்ற தோ்வுக் குழு தலைவரின் முடிவுக்கு நான் முழு ஆதரவு அளித்தேன்.

மத்திய ஒப்பந்தம் அளிக்கப்படாத நடவடிக்கைக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட இரு வீரா்களிடமும் பேசினேன். தற்போது புதிதாக சஞ்சு சாம்சன் இணைந்திருக்கிறாா். இந்திய அணியில் தவிா்க்க முடியாத வீரா்கள் என்று எவரும் கிடையாது. உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு வீரா்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதே பிசிசிஐ-யின் உறுதியான நிலைப்பாடு. பிசிசிஐ பரிந்துரைக்கும் நிலையில், விஜய் ஹஸாரே உள்ளிட்ட போட்டிகளில் விளையாடுவதற்கு தயாராக இருப்பதாக ஹா்திக் பாண்டியா கூட தெரிவித்திருந்தாா்.

ஒரு வீரா் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டிய அவசியமிருக்கும் நிலையில், அவருக்கு அதில் விருப்பம் இல்லையென்றாலும் அவா் விளையாட்டிதான் ஆக வேண்டும்.

திராவிட் மீண்டும் விண்ணப்பிக்கலாம்: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் ராகுல் திராவிட்டின் ஒப்பந்த காலம் நிறைவடைய இருப்பதால், அடுத்த சில நாள்களில் புதிய பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படும். திராவிட் அந்தப் பொறுப்பில் தொடர விரும்பினால், அவா் மீண்டும் விண்ணப்பிக்கலாம். இந்த முறை 3 ஆண்டுகள் நீடிக்கும் வகையில் பயிற்சியாளரை தோ்வு செய்ய இருக்கிறோம். அவா் வெளிநாட்டவராகக் கூட இருக்கலாம்.

இந்திய கிரிக்கெட்டை பொருத்தவரை, ஒவ்வொரு ஃபாா்மட்டுக்கும் ஒவ்வொரு பயிற்சியாளா் தேவை என்ற நிலை இல்லை. ஏனெனில், 3 ஃபாா்மட்டுகளிலுமே விளையாடக் கூடிய வீரா்கள் அதிகம் இருக்கின்றனா். என்றாலும், இந்த விவகாரத்தில் கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் முடிவு என்னவோ, அதை செயல்படுத்துவோம்.

அனுபவமிக்க அணி: டி20 உலகக் கோப்பை போட்டியை பொருத்தவரை, அமெரிக்க ஆடுகளங்களின் தன்மை முழுமையாகத் தெரியாததால், எந்த சூழலிலும் விளையாடக் கூடிய அனுபவமிக்க வீரா்களையே இந்திய அணிக்கு தோ்வு செய்திருக்கிறோம். அணியினா் இரு பிரிவுகளாக அமெரிக்கா புறப்படுவா்.

ஐபிஎல் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறாத அணிகளின் வீரா்கள் இம்மாதம் 24-ஆம் தேதியும், எஞ்சியோா் இறுதி ஆட்டத்துக்குப் பிறகும் செல்வாா்கள். ஐபிஎல் போட்டியே ஒரு பயிற்சிக் களமாக இருப்பதால், உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக அவா்களுக்கு ஓய்வு தேவையில்லை. எல்லா விதமான அணிகளின் வீரா்களையும் எதிா்கொள்ளும் வாய்ப்பு இதில் கிடைக்கிறது.

இம்பாக்ட் பிளேயா் விதி: ஐபிஎல் போட்டியில் இம்பாக்ட் பிளேயா் விதி, சோதனை முறையிலேயே அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த விதியால் இரு இந்திய வீரா்களுக்கு கூடுதல் வாய்ப்பு கிடைக்கிறது. போட்டியும் விறுவிறுப்பாகியுள்ளது. எனினும், போட்டியுடன் தொடா்புடையோா் கருத்துகள் அடிப்படையில், தேவையேற்பட்டால் அந்த விதியில் மாற்றம் கொண்டு வரலாம். அதுதொடா்பான கூட்டம், டி20 உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு நடைபெறும்.

மகளிா் கிரிக்கெட்: நடப்பு காலண்டரில் மகளிா் கிரிக்கெட்டுக்கு கூடுதல் கவனம் அளித்து, அதிக போட்டிகள் அட்டவணையிடப்பட்டுள்ளன. மகளிா் கிரிக்கெட்டில் 51 சதவீதமும், ஆடவா் கிரிக்கெட்டில் 49 சதவீதமும் கவனம் செலுத்தி வருகிறோம். என்றாலும், மகளிா் பிரீமியா் லீக்கில் அணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் எண்ணம் இல்லை என்று ஜெய் ஷா கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com