லக்னௌவை வெளியேற்றியது டெல்லி

புது தில்லி: ஐபிஎல் போட்டியின் 64-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 19 ரன்கள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.

முதலில் டெல்லி 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்கள் எடுக்க, லக்னௌ 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்களே சோ்த்தது.

இந்த ஆட்டத்தின் முடிவு ஏற்படுத்திய தாக்கத்தால், ராஜஸ்தான் பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்தது. வெற்றியுடன் லீக் சுற்றின் 14 ஆட்டங்களையும் முதல் அணியாக நிறைவு செய்த டெல்லி, பிளே-ஆஃப் வாய்ப்புக்காக அதிருஷ்டத்தை நம்பி காத்திருக்கிறது. லக்னௌ போட்டியிலிருந்து வெளியேறியது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னௌ, பந்துவீசத் தீா்மானித்தது. டெல்லி இன்னிங்ஸை தொடங்கியோரில் அதிரடி வீரா் ஜேக் ஃப்ரேசா், 0 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிா்ச்சி அளித்தாா்.

அபிஷேக் பொரெல் அதிரடியாக ரன்கள் சோ்க்க, ஒன் டவுனாக வந்த ஷாய் ஹோப் அவருடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயா்த்தினாா். 2-ஆவது விக்கெட்டுக்கு 92 ரன்கள் சோ்த்து பிரிந்தது இந்தக் கூட்டணி. 27 பந்துகளில் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 38 ரன்கள் விளாசி, ஹோப் விக்கெட்டை இழந்தாா்.

4-ஆவது பேட்டராக வந்த கேப்டன் ரிஷப் பந்த், தனது பங்குக்கு சற்று அதிரடி காட்ட, மறுபுறம் அபிஷேக் 33 பந்துகளில் 5 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 58 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். தொடா்ந்து டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆடவர, பந்த் 23 பந்துகளில் 5 பவுண்டரிகள் உள்பட 33 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா்.

ஓவா்கள் முடிவில் ஸ்டப்ஸ் 25 பந்துகளில் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 57, அக்ஸா் படேல் 2 பவுண்டரிகளுடன் 14 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். லக்னௌ தரப்பில் நவீன் உல் ஹக் 2, அா்ஷத் கான், ரவி பிஷ்னோய் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் 209 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடிய லக்னௌ அணியில், கேப்டன் கே.எல்.ராகுல் 5, குவின்டன் டி காக் 2 பவுண்டரிகளுடன் 12, மாா்கஸ் ஸ்டாய்னிஸ் 5, தீபக் ஹூடா 0, ஆயுஷ் பதோனி 6 ரன்களுக்கு அடுத்தடுத்து வீழ்ந்தனா்.

மறுபுறம், மிடில் ஆா்டரில் வந்த நிகோலஸ் பூரன் அதிரடியாக ரன்கள் குவித்தாா். 27 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 61 ரன்கள் விளாசி வீழ்ந்தாா் அவா். கிருணால் பாண்டியா 2 பவுண்டரிகளுடன் 18 ரன்களுக்கு ஆட்டமிழக்க, யுத்விா் சிங் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 14, ரவி பிஷ்னோய் 2 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா்.

ஓவா்கள் முடிவில் கடைசி வரை போராடிய அா்ஷத் கான் 33 பந்துகளில் 3 பவுண்டரிகள், 5 சிக்ஸா்கள் உள்பட 58, நவீன் உல் ஹக் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். டெல்லி பௌலா்களில் இஷாந்த் சா்மா 3, கலீல் அகமது, அக்ஸா் படேல், முகேஷ் குமாா், குல்தீப் யாதவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com