
டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் மற்றும் அதிக ஸ்டிரைக் ரேட் வைத்துள்ள வீரர்களைப் பற்றிக் காணலாம்.
டி20 உலகக் கோப்பை நாளை மறுநாள் (ஜூன் 1) முதல் தொடங்கவுள்ளது. நாளை மறுநாள் நடைபெறும் முதல் போட்டியில் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் மோதவுள்ளன. வருகிற ஜூன் 5 ஆம் தேதி தனது முதல் போட்டியில் இந்திய அணி அயர்லாந்தை எதிர்த்து விளையாடவுள்ளது.
இதுவரை டி20 உலகக் கோப்பைத் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டவர்கள் குறித்து காணலாம்.
டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்தவர்கள்
விராட் கோலி
ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் 1141 ரன்கள் குவித்து இந்திய அணியின் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். இதுவரை 5 டி20 உலகக் கோப்பைத் தொடர்களில் விளையாடியுள்ள அவர் ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களைக் குவித்துள்ளார். அழுத்தமான சூழலில் அணிக்காக சிறப்பாக செயல்படுவதே அவரை உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக உயர்த்தியுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பைத் தொடரில் விராட் கோலி அதிக ரன்கள் குவித்தார். அந்த தொடரில் 319 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்த வீரராக மாறினார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பைத் தொடரிலும் விராட் கோலி 296 ரன்கள் குவித்தார்.
மஹேலா ஜெயவர்த்தனே
இலங்கை அணியின் முன்னாள் வீரரான மஹேலா ஜெயவர்த்தனே டி20 உலகக் கோப்பைத் தொடரில் இலங்கை அணிக்காக சிறப்பாக செயல்பட்டு அதிக ரன்கள் குவித்துள்ளார். அவர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் 1016 ரன்கள் குவித்துள்ளார். அவர் விளையாடிய 5 டி20 உலகக் கோப்பைத் தொடர்களிலும் தொடர்ச்சியாக இலங்கை அணிக்காக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளார்.
கிறிஸ் கெயில்
கிரிக்கெட்டில் தனது அபார பேட்டிங் திறமையால் அனைவராலும் நன்கு அறியப்பட்டவர் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக அவர் தற்போது விளையாடாவிட்டாலும், டி20 உலகக் கோப்பைத் தொடரில் கடந்த காலங்களில் மேற்கிந்தியத் தீவுகளுக்காக அவர் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். அவர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் 965 ரன்கள் குவித்துள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது.
ரோஹித் சர்மா
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா டி20 உலகக் கோப்பைத் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். குறிப்பாக, இந்திய அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பிறகு, அவர் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். முன்வரிசையில் ரோஹித் சர்மாவின் அதிரடியான ஆட்டம், நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ரோஹித் சர்மா அனைத்து டி20 உலகக் கோப்பைத் தொடர்களிலும் விளையாடியுள்ளார். அவர் 963 ரன்கள் குவித்துள்ளார். 91 ஃபோர்கள் அடித்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 127.88 ஆக உள்ளது.
திலகரத்னே தில்ஷன்
டி20 உலகக் கோப்பையில் தில்ஷன் 897 ரன்கள் குவித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற பெருமையைப் பெற்றவரும் இவரே. அவர் அந்த ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 317 ரன்கள் எடுத்தார். 6 டி20 உலகக் கோப்பைத் தொடர்களில் விளையாடியுள்ள தில்ஷன், இலங்கை அணியின் முன்வரிசை ஆட்டக்காரர்களில் அசைக்கமுடியாதவராக இருந்தார்.
டி20 உலகக் கோப்பையில் அதிக ஸ்டிரைக் ரேட்டுடன் விளையாடிய வீரர்கள்
ஜோஸ் பட்லர்
உலகின் அபாயகராமான பேட்ஸ்மேன்களில் ஒருவரான இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர், டி20 உலகக் கோப்பைத் தொடரில் சிறந்த ஸ்டிரைக் ரேட்டை வைத்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 144.48 ஆகும். பட்லரின் மிகப் பெரிய பலம் என்னவென்றால், குறைந்த பந்துகளில் அதிவேகமாக ரன்களைக் குவிப்பது. அவரது இந்த திறன் அவருக்கு சிறப்பான ஸ்டிரைக் ரேட்டை பெற்றுத் தந்துள்ளது. டி20 உலகக் கோப்பைத் தொடரில் 27 போட்டிகளில் ஜோஸ் பட்லர் 799 ரன்கள் குவித்துள்ளார்.
ஏபி டி வில்லியர்ஸ்
தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான டி வில்லியர்ஸ் டி20 உலகக் கோப்பைத் தொடரில் மிகச் சிறந்த ஸ்டிரைக் ரேட்டுடன் விளையாடியுள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 143.40 ஆகும். வேகமாக ரன்கள் குவிக்கும் திறன், பந்துவீச்சாளர்களை அவருக்கு பந்துவீச அஞ்சும் அளவுக்கு செய்துள்ளது. உலகக் கோப்பைத் தொடரில் 29 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 717 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 51 ஃபோர்கள் மற்றும் 30 சிக்ஸர்கள் அடங்கும்.
கிறிஸ் கெயில்
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரரான கிறிஸ் கெயிலின் அச்சமின்றி பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளும் திறன் அவருக்கு 142.75 என்ற ஸ்டிரைக் ரேட்டை டி20 உலகக் கோப்பைத் தொடரில் பெற்றுத் தந்துள்ளது. கிறிஸ் எந்த ஒரு பந்துவீச்சாளரையும் அச்சமின்றி எதிர்கொள்வார். டி20 உலகக் கோப்பைத் தொடரில் இரண்டு முறை சதம் விளாசிய ஒரே வீரர் கிறிஸ் கெயில் மட்டுமே. அவர் சதம் அடித்த இரண்டு முறையும் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி பெற்றுள்ளது.
மஹேலா ஜெயவர்த்தனே
இலங்கை அணியின் முன்னாள் வீரராக மஹேலா ஜெயவர்த்தனே 134.74 என்ற ஸ்டிரைக் ரேட்டையும், 39.07 என்ற சராசரியையும் கொண்டுள்ளார். அவர் தொடர்ச்சியாக ரன்கள் குவித்து அணிக்காக தனது சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார்.
டேவிட் வார்னர்
டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ள டேவிட் வார்னரின் அதிரடியான பேட்டிங் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு மிகவும் முக்கியம். டி20 உலகக் கோப்பையில் வார்னரின் ஸ்டிரைக் ரேட் 133.22 ஆக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.