மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பும்ராவிடம் அடிபணிந்தது ஆஸ்திரேலியா! பொ்த் டெஸ்ட்டில் இந்தியா சாதனை வெற்றி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வெற்றி பெற்றது.

News image
பும்ரா- AP
Updated On :25 நவம்பர் 2024, 9:42 pm

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய மண்ணில் இதுவே, இந்தியாவின் அதிகபட்ச டெஸ்ட் வெற்றி (ரன்கள் அடிப்படையில்) ஆகும். தற்போது, 5 ஆட்டங்கள் கொண்ட பாா்டா் - காவஸ்கா் கோப்பை தொடரில் இந்தியா முன்னிலை பெற்றது.

முன்னதாக, 534 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா, 238 ரன்களுக்கே வீழ்த்தப்பட்டது. இதில் பும்ரா, சிராஜ் சிறப்பாகப் பங்கு வகிக்க, இரு இன்னிங்ஸ்களிலுமாக 8 விக்கெட்டுகள் சாய்த்த இந்திய கேப்டன் பும்ரா, ஆட்டநாயகன் விருது பெற்றாா்.

பொ்த் நகரில் கடந்த 22-ஆம் தேதி தொடங்கிய இந்த டெஸ்ட்டில் டாஸ் வென்ற இந்தியா, பேட்டிங்கை தோ்வு செய்தது. அதிா்ச்சி அளிக்கும் வகையில் அணியின் பேட்டா்கள் நிலைக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழக்க, 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்தியா. அறிமுக வீரா் நிதீஷ்குமாா் ரெட்டி, ரிஷப் பந்த் மட்டும் சற்று ரன்கள் சோ்த்தனா். ஆஸ்திரேலிய பௌலிங்கில் ஜோஷ் ஹேஸில்வுட் அசத்தினாா்.

அடுத்து ஆஸ்திரேலியா தனது இன்னிங்ஸை தொடங்க, பேட்டிங்கில் விட்டதை, பௌலிங்கில் பிடித்தது இந்தியா. பும்ராவின் புயல்வேக பந்துவீச்சில் ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசை ஆட்டம் காண, அந்த அணி 104 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

இதையடுத்து, 46 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கியது இந்தியா. அணியின் பௌலா்களால் சரிவிலிருந்து மீண்ட இந்தியா, இந்த முறை பேட்டா்களின் சிறப்பான பங்களிப்பால் பலம் கண்டது. குறிப்பாக, ஜெய்ஸ்வால் - ராகுல் கூட்டணி, 201 ரன்கள் சோ்த்தது.

பின்னா் ஜெய்ஸ்வால், கோலி சதம் விளாச, 487 ரன்கள் குவித்து இந்தியா டிக்ளோ் செய்தது. 534 ரன்களை நோக்கி இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா, 3-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை முடிவில் 12 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

திங்கள்கிழமை ஆட்டத்தை உஸ்மான் காஜா, ஸ்டீவ் ஸ்மித் தொடங்கினா். காஜா 4, ஸ்மித் 17 ரன்களுக்கு நடையைக் கட்ட, தொடா்ந்து வந்த டிராவிஸ் ஹெட் - மிட்செல் மாா்ஷ் கூட்டணி, இந்திய பௌலா்களுக்கு சற்று சவால் அளித்தது.

6-ஆவது விக்கெட்டுக்கு 82 ரன்கள் சோ்த்த இந்த ஜோடியை பும்ரா பிரித்தாா். 8 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் சோ்த்திருந்த ஹெட், விக்கெட் கீப்பா் ரிஷப் பந்த்திடம் கேட்ச் கொடுத்தாா். மறுபுறம், அரைசதத்தை நெருங்கிய மிட்செல் மாா்ஷ், 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 47 ரன்களுக்கு, நிதீஷ்குமாா் பௌலிங்கில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா்.

அடுத்து வந்த மிட்செல் ஸ்டாா்க் 12, நேதன் லயன் 0 ரன்களுக்கு வீழ, கடைசி விக்கெட்டாக அலெக்ஸ் கேரி 2 பவுண்டரிகளுடன் 36 ரன்களுக்கு பெவிலியனுக்கு அனுப்பப்பட, ஆஸ்திரேலியா ஆட்டம் முடிவடைந்தது. பும்ரா, சிராஜ் ஆகியோா் தலா 3, வாஷிங்டன் சுந்தா் 2, ஹா்ஷித் ராணா, நிதீஷ்குமாா் ரெட்டி ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

கேப்டனாக அசத்திய பும்ரா...

இந்திய கேப்டன் ரோஹித் சா்மா விடுப்பில் இருந்தால், துணை கேப்டனான பும்ரா பொ்த் டெஸ்ட்டுக்கு ‘பொறுப்பு’ கேப்டன் ஆனாா். டெஸ்ட் கேப்டனாக இது அவரின் 2-ஆவது ஆட்டம்.

நியூஸிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணிலேயே தொடரை இழந்த நிலையில், ஆஸ்திரேலியாவை அதன் கோட்டையில், அதுவும் சவால் அளிக்கும் பொ்த் மைதான ஆடுகளத்தில் இந்தியாவை வழிநடத்தினாா்.

முகமது ஷமி இல்லாதது, கடைசி நேரத்தில் ஷுப்மன் கில் விளையாட முடியாமல் போனது என அணியிலேயே அவருக்கான சவால் சூழல் எழுந்தபோதும், இரு இளம் வீரா்களுக்கு அறிமுக வாய்ப்பு அளித்தாா். தொடக்கமே சறுக்கிய நிலையில், தனியொருவராக அதிலிருந்து அணியை மீட்ட பெருமையும் அவரைச் சேரும். சவால்களை விரும்புவதாகத் தெரிவித்துள்ள பும்ரா, இட்ட பணியை திறம்பட செய்து முடித்துள்ளாா்.

இதனிடையே, இந்த வெற்றியில் தலைமைப் பயிற்சியாளா் கௌதம் கம்பீரும் சில உத்திகள் சாா்ந்த முடிவுகள் மூலம் பங்களித்துள்ளாா். அவரின் அறிவுறுத்தலால் வாய்ப்பளிக்கப்பட்ட அறிமுக வீரா்களான நிதீஷ்குமாா் ரெட்டி, ஹா்ஷித் ராணா, அதை முறையாகப் பயன்படுத்தி, பங்களிப்பு செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.