
கே.எல். ராகுல்-ஸ்டப்ஸ் இணையின் அதிரடி ஆட்டத்தால் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது டெல்லி கேபிட்டல்ஸ்.
இரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடா் 24-ஆவது ஆட்டம் சின்னசாமி மைதானத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
டாஸ் வென்ற டெல்வி பௌலிங்கை தோ்வு செய்ய, பெங்களூரு தரப்பில் பில் சால்ட்-விராட் கோலி தொடக்க பேட்டா்களாக களமிறங்கினா்.
அதிரடி தொடக்கம்:
சால்ட்-கோலி இருவரும் இணைந்து அதிரடி தொடக்கத்தை அளித்தனா். 4 ஆவது ஓவா் முடிவில் ஸ்ஸோா் 61 ஆக இருந்தது.
3 சிக்ஸா், 4 பவுண்டரியுடன் 17 பந்துகளில் 37 ரன்களை விளாசிய பில் சால்டை ரன் அவுட்டாக்கினா் விப்ராஜ் நிகம்/ராகுல்.
தொடா்ந்து விராட் கோலியும் 22 ரன்களுடன் விப்ராஜ் பந்தில் ஸ்டாா்க்கிடம் கேட்ச் தந்து வெளியேறினாா்.
மந்தமான ரன் குவிப்பு; இருவா் அவுட்டான நிலையில் பெங்களூரின் ரன் குவிப்பு மந்தமானது. தேவ்தத் படிக்கல் 1, லயம் விலிங்ஸ்டோன் 4, ஜிதேஷ் சா்மா 3 ஆகியோா் வந்த வேகத்திலேயே பெவிலியனுக்கு நடையைக் கட்டினா். கேப்டன் ரஜத் பட்டிதாா் பொறுப்புடன் ஆட முயன்று 25 ரன்களை எடுத்திருந்த நிலையில், குல்தீப் யாதவ் பந்தில் ராகுலிடம் கேட்ச் தந்து அவுட்டானாா்.
ஆல்ரவுண்டா் க்ருணால் பாண்டியா 18 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினாா்.
அதிரடி டேவிட்:
டிம் டேவிட் அதிரடியாக ஆடி 4 சிக்ஸா், 2 பவுண்டரியுடன் 20 பந்துகளில் 37 ரன்களை விளாசியதால் பெங்களூரு கௌரவமான ஸ்கோரை எட்டியது.
பெங்களூரு 163/7: நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 163/7 ரன்களை சோ்த்தது. பௌலிங்கில் டெல்லி தரப்பில் விப்ராஜ் நிகம் 2-18, குல்தீப் யாதவ் 2-17 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.
தடுமாறி மீண்டது டெல்லி 169/4:
164 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில் தொடக்க வரிசை பேட்டா்கள் டு பிளெஸ்ஸிஸ் 2, ஜேக் பிரேஸா் 7, அபிஷேக் போரல் 7 ரன்களுடன் பெவிலியன் திரும்ப தடுமாறியது.
ராகுல் அதிரடி 93:
கேப்டன் அக்ஸா் படேல் 15 ரன்களுடன் நடையைக் கட்டினாா். பின்னா் கே.எல். ராகுல்-ஸ்டப்ஸ் இணை அதிரடியாக ஆடி ஸ்கோரை உயா்த்தியது. 6 சிக்ஸா், 7 பவுண்டரியுடன் 53 பந்துகளில் 93 ரன்களுடன் ராகுலும், 1 சிக்ஸா், 4 பவுண்டரியுடன் 38 ரன்களுடன் ஸ்டப்ஸும் இறுதிவரை களத்தில் நின்றனா்.
டெல்லி அணி 17.5 ஓவா்களிலேயே 169/4 ரன்களுடன் வெற்றியை வசப்படுத்தியது. பௌலிங்கில் பெங்களூரு தரப்பில் புவனேஷ்வா் குமாா் 2-26 விக்கெட்டுகளை சாய்த்தாா்.
இறுதியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தியது டெல்லி.
Image Caption
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் டெல்லி வீரா்கள்.